Monday, October 27, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.10.2025

பில் கேட்ஸ்







திருக்குறள்: 

குறள் 460: 

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் 
அல்லற் படுப்பதூஉ மில். 

விளக்க உரை: 

நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை, தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

பழமொழி :

Every fall in life is a step to rise. 

வாழ்க்கையில் ஒவ்வொரு வீழ்ச்சியும் எழுவதற்கான படிகளே.

இரண்டொழுக்க பண்புகள் :

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

அதிகம் வைத்திருப்பவன் செல்வந்தன் அல்ல; அதிகம் கொடுப்பவனே செல்வந்தன்

     –எரிச் ஃப்ரோம்

பொது அறிவு : 

1. 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது?

கைலாஷ் சத்யார்த்தி மற்றும்
மலாலா யூசுப்சையி
Kailash Satyarthi and Malala Yousafzai

02.இந்தியாவில் அதிக மழை பெய்யும் மாநிலம் எது?

மேகாலயா -Meghalaya

English words :

vineyard – a piece of land where grapes are grown.திராட்சைத் தோட்டம்

தமிழ் இலக்கணம்: 

 தெரிநிலை வினை என்பது ஒரு செயலின் தொழிலையும், அது நடந்த காலத்தையும் தெளிவாகக் காட்டும் வினைச்சொல் ஆகும்.

எடுத்துக்காட்டு: "கயல்விழி மாலை தொடுத்தாள்".

செய்பவன்: கயல்விழி
கருவி: நார், பூ, கை
நிலம்: அவள் இருக்கும் இடம்
செயல்: தொடுத்தல்
காலம்: இறந்த காலம்
செய்பொருள்: மாலை

அறிவியல் களஞ்சியம் :

 முதல் 8 வாரம் வரை குழந்தைகளின் கண்களில் கண்ணீர் வராது.

மனித இதயம் சராசரியான ஒரு வருடத்திற்கு 35 மில்லியன் முறை துடிக்கிறது.

அக்டோபர் 28

பில் கேட்ஸ் அவர்களின் பிறந்தநாள்

வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது.

நீதிக்கதை

 ஒரு ஊர்ல ஒரு வயசான பாட்டி தனியா வசித்து வந்தார்கள். அந்த ஊர்ல கொஞ்ச நாளா திருடங்க நடமாட்டம் அதிகமிருந்தது. 

ஒரு நாள் பாட்டி வெளியே போய்விட்டு வந்து பார்த்த போது வீட்டுக் கதவு திறந்திருந்தது. உள்ளே போன பாட்டிக்கு வீட்டுக்குள் ஒரு திருடன் திரைச்சீலைக்குப் பின்னால் மறைந்து இருப்பது தெரிந்து விட்டது. 

அவனை எப்படியும் தப்பிக்க விடக் கூடாது புத்திசாலித் தனமாக பிடிக்கணும்னு நினைச்ச பாட்டி உடனே ஒரு தந்திரம் செய்தார்கள். 

அங்கிருந்த விளக்கு தண்டின் முன் நின்று கொண்டு, மாய விளக்கே என் மீது கோபமா? நான் வெளியே போய் வந்ததும் என்ன நடந்தது என்று கேட்பாயே இன்று ஏன் கேட்கவில்லை என்றார்கள். இதைக் கேட்டதும் திருடனுக்கு ஆச்சரியம். பேசும் விளக்கா என்று எட்டிப் பார்த்தான். 

விளக்கு திரைச்சீலையின் அசைவில் லேசாக ஆட பாட்டி, கோபமில்லையா? அப்படியானால் என்ன நடந்தது சொல்கிறேன் கேள். பக்கத்து வீட்டு ஜூலி இன்று கடைத் தெருவுக்குப் போகும் போது ஒரு நாய் அவளைத் துரத்தியது. அவள் சத்தம் போட்டுக் கத்தினாள். 

மீண்டும் விளக்கு காற்றில் அசைய, ஓ எப்படிக் கத்தினாள் என்று கேட்கிறாயா என பாட்டி கேட்டார்கள். திருடனுக்கோ ஒன்றும் புரியவில்லை. நமக்கு மட்டும் ஒண்ணும் கேட்க வில்லை. விளக்கு ஆடுவது தெரியுது. ஆனால் கிழவி பேசுகிறாளே என்று குழம்பினான். 

மாய விளக்கே ஜூலி எப்படிக் கத்தினாள் என்று சொல்கிறேன் என்றபடி பாட்டி ஹெல்ப் ஹெல்ப் என்று உரக்கக் கத்த அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பாட்டிக்கு ஏதோ ஆபத்து என்று ஓடி வந்தவர்கள் திருடனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

நீதி :

காலம் அறிந்து  அதற்கேற்ப புத்திசாலித் தனமாக நடந்து கொள்ள வேண்டும்.

இன்றைய செய்திகள்

28.10.2025

⭐சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.17½ லட்சம்- போலீசிடம் ஒப்படைத்த பிளஸ்-2 மாணவிக்கு குவியும் பாராட்டு

⭐மாணவர்கள் பல புதிய நிறுவனங்களை உருவாக்க வேண்டும்... அதுவே என் ஆசை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை.

⭐மோன்தா புயல் எதிரொலி: தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 பிரித்தானிய கிரிக்கெட் வீரர் ஜோ ரூட் 10,000 ரன்கள் கடந்து புதிய சாதனை: பிரித்தானிய கிரிக்கெட் வீரர் ஜோ ரூட், இந்த வாரம் 10,000 ரன்கள் சாதனையை எட்டியுள்ளார். 

Today's Headlines

⭐Plus-2 student who handed over Rs. 17½ lakhs to the police after finding it lying unclaimed on the road is receiving praise.

⭐ Students should create many new institutions... That is my wish, CM M.K. Stalin advised.

⭐Cyclone Montha: Cyclone warning pole number 2 raised at Tamil Nadu ports

 SPORTS NEWS 

 🏀 British cricketer Joe Root crosses 10,000 runs, sets new record: British cricketer Joe Root has reached the record of 10,000 runs this week.

Covai women ICT_போதிமரம்

Sunday, October 26, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.10.2025

கே. ஆர். நாராயணன்

   






திருக்குறள்: 

குறள் 456: 

மனந்தூயார்க் கெச்சநன் றாகும் இனந்தூயார்க் 
கில்லைநன் றாகா வினை 

விளக்க உரை: 

மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு , அவர்க்குப் பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும், இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

பழமொழி :

Time well spent is the life well lived. 

சரியாக பயன்படுத்திய நேரமே நன்றாக வாழ்ந்த வாழ்க்கை ஆகும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.செல்லும் இடமெல்லாம் அன்பு, ஒழுக்கம், நேர்மை எனும் விதைகளை விதைத்துச் செல்வேன்.

2.அதன் மூலம் இவ்வுலகை நாம் நன்கு வாழக்கூடிய இடமாக மாற்ற முயற்சி செய்வேன்.

பொன்மொழி :

தோற்றத்தில் எளிமையும் இனிமையும் அழகிற்கு அத்தியாவசிய தேவை- எட்மண்ட் பர்க்.

பொது அறிவு : 

01.உலகில் அதிக தூரம் பயணிக்கும் பறவை எது?

ஆர்க்டிக் ஆலா - Arctic tern

02.இந்திய நூலக அறிவியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

டாக்டர். எஸ்.ஆர்.ரங்கநாதன் 
Dr. S. R. Ranganathan 

English words :

pampering – to take care of somebody very well and make them comfortable, ஒருவரை மிக நல்ல முறையில் பேணுதல், செல்லம் கொடுத்தல்

தமிழ் இலக்கணம்: 

 வினைச்சொல் முக்கியமாகத் தெரிநிலை வினை, குறிப்புவினை என இருவகைப்படும்.
எ.கா. தொடுத்தாள், வந்தான், கரிகாலன்

அறிவியல் களஞ்சியம் :

 நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம்.

நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.
நமது கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.

அக்டோபர் 27

கே. ஆர். நாராயணன் அவர்களின் பிறந்தநாள்

கே. ஆர். நாராயணன் என்று அறியப்படும் கொச்செரில் ராமன் நாராயணன் (பிறப்பு - கோட்டயத்தில் உள்ள உழவூர் (கேரளா), அக்டோபர் 27, 1920; இறப்பு - புது தில்லி, நவம்பர் 9, 2005) பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர் ஆவார். இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே மலையாளிஆவார். முன்னர் இவர் இந்திய வெளியுறவுத் துறையில் அதிகாரியாக பணியாற்றியவர்.

நீதிக்கதை

கதை :

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 


பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். 


முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை. 


எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே. 


அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். 


இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 


நீதி :

எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்தி விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிப்பாக பலன் கிடைக்கும்.

இன்றைய செய்திகள்

27.10.2025

⭐அரபிக் கடலில் 11 நாட்களாக சிக்கித் தவித்த 31 மீனவர்களை மீட்டது இந்திய கடலோர காவல்படை

⭐ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் பொருட்கள் விற்பனை அதிகரிப்பு-பிரதமர் மோடி பெருமிதம்

⭐போர் நிறுத்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 93 பேர் பலி

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் உலக கோப்பை: கடைசி லீக்கில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இங்கிலாந்து

Today's Headlines

⭐Indian Coast Guard rescues 31 fishermen stranded in Arabian Sea for 11 days 

⭐PM Modi proudly said GST tax cut boosts sales of goods .

⭐93 killed in Israeli strikes on Gaza in violation of ceasefire 

 *SPORTS NEWS* 

🏀Women's World Cup, England easily beat New Zealand in final league.

Covai women ICT_போதிமரம்

Friday, October 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.10.2025

பிகாசோ







திருக்குறள்: 

குறள் 137: 

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் 
எய்துவர் எய்தாப் பழி. 

உரை: 

ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்.

பழமொழி :

Life rewards those who never quit. 

ஒரு போதும் முயற்சியைக் கை விடாதவர்களுக்கு வாழ்க்கை பெரிய வெகுமதியை தருகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

தூய்மையான உள்ளத்தில் உண்மையான அழகு உள்ளது - மகாத்மா காந்தி

பொது அறிவு : 

01.இயந்திரத்தின் எஞ்சினை குளிர்விக்கும் கருவியின் பெயர் என்ன?

ரேடியேட்டர் - Radiator

02. நமது உடலில் பிட்யூட்டரி சுரப்பி எங்குள்ளது?

மூளையின் அடிப்பகுதியில்
At the base of the brain

English words :

different -diverse

dine-feast

தமிழ் இலக்கணம்: 

 பண்புப்பெயர் (அல்லது குணப்பெயர்): ஒருவரின் குணத்தை அல்லது பண்பைக் குறிப்பது 
எ.கா. அழகு, மாட்சி, நேர்மை.
தொழிற்பெயர்: ஒரு தொழிலைக் குறிப்பது.
எ. கா –தச்சர், ஆசிரியர், மருத்துவர்

அறிவியல் களஞ்சியம் :

 நமது உடலில் உள்ள இரத்த குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

அக்டோபர் 25

பிகாசோ அவர்களின் பிறந்தநாள்

பிகாசோ, 1881-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் நாள் ஸ்பெயின் நாட்டில் உள்ள மால்கா என்னுமிடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை, ஜோச் ரூயிசு பால்சுகா. தாய், மரியா பிகாசோ. தந்தை ஓவிய ஆசிரியர். தன்னுடைய தாய் பெயரையே பிரதானப் பெயராக வைத்துக்கொண்டார். ஓவியத்துக்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த பிகாசோ, ஓவியம் வரைவதே தனி ஸ்டைல் என்றுதான் சொல்ல வேண்டும்.சிந்திக்கும் இடைவெளிகூட இல்லாமல் வேகமாக வரைவதில் பிகாசோவுக்கு இணை பிகாசோவே. தன்னுடைய வாழ்நாள் முழுவதும் கிட்டத்தட்ட 13,000-க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார். பிகாசோவின் மற்றொரு பிரபலமான ஓவியம், அவர் வரைந்த ஒற்றைப் புறா. இதுதான் உலக அமைதிக்கான சின்னமாக இன்றும் பறந்துகொண்டிருக்கிறது. ``ஓவியன், இருப்பதைப் பார்த்து அப்படியே வரைந்துவிட்டுப்போவதில் என்ன புதுமையான விஷயம் இருக்கிறது? பார்க்கும் காட்சி அவன் மனதினுள் ஏற்படுத்தும் உணர்ச்சிகளைத்தான் ஓவியன் ஓவியமாக வரையவேண்டும்” என்று கூறும் பிகாசோ தன்னுடைய ஒவ்வொரு படைப்பின் வழியாகவும் சமூக, தனிமனித உணர்வுகளை தன்னுடைய இறுதிக்காலம் வரை பிரதிபலித்துக்கொண்டே இருந்தார்.

இன்று (அக்டோபர் 25) இந்த மகத்தான ஓவியனின் பிறந்தநாள்!

நீதிக்கதை

 ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். 

ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். 

குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. 

அதுஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான். 

வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன். 

வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள். 

புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல். 

நீதி :

யார் யாரிடம் எந்த வேலையை ஒப்படைக்க வேண்டும் என ஆராய்ந்து ஒப்படைக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

25.10.2025

⭐நீலகிரி: ஊசிமலை காட்சி முனைப் பகுதியில் காட்டு யானை ஒன்று குட்டியை ஈன்றது. தொடர்ந்து குட்டியுடன் அதே பகுதியில் காட்டு யானை முகாமிட்டுள்ளதால், ஊசி மலை காட்சி முனைப் பகுதி தற்காலிகமாக மூடல்.

⭐மத்திய பிரதேசத்தின் போபாலில் அசிட்டிலின் வாயுவை வெளியேற்றும் துப்பாக்கியைப் பயன்படுத்திய சுமார் 125 குழந்தைகள் கண் எரிச்சல் & பார்வை குறைபாடு பிரச்சினையோடு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

⭐பாகிஸ்தானில் அடுத்தடுத்து இரண்டு குண்டு வெடிப்பு: 3 போலீசார் உயிரிழப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀கபடியில் தங்கம் வென்ற தமிழ்நாடு வீரர்கள்- துணை முதலமைச்சர் வாழ்த்து. பஹ்ரைனில் நடைபெற்ற 3வது ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சர்வதேச அரங்கில் வெற்றிக்கொடி நாட்டி தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித்தந்துள்ளனர்.

Today's Headlines

⭐Nilgiris district Usimalai viewpoint has been temporarily closed as a wild elephant gave birth and continues to camp in the same area with the calf. 

⭐Around 125 children are being treated in hospitals with eye irritation & vision impairment after using an acetylene gas gun in Bhopal, Madhya Pradesh.

⭐Two consecutive bomb blasts in Pakistan. 3 policemen were killed.

 SPORTS NEWS 

🏀 Tamil Nadu players win gold in Kabaddi -  The Deputy Chief Minister congratulates them. The 3rd Asian Youth Games were held in Bahrain. They have brought glory to Tamil Nadu by flying the flag of victory internationally.
Covai women ICT_போதிமரம்

 

Thursday, October 23, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.10.2025

ஐக்கிய நாடுகள் நாள்

   






திருக்குறள்: 

குறள் 978: 

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 
அணியுமாம் தன்னை வியந்து. 

உரை: 

பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும், ஆனால் சிறுமையோ தன்னைத் தானே வியந்துப் பாராட்டிக் கொள்ளும்.

பழமொழி :

No effort, no harvest. 

முயற்சி இல்லாமல் விளைச்சல் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1.இரக்கமில்லாத மனமும், இயற்கையை அழிக்கும் நாடும் கெடும்.

2.எனவே இல்லாதவர்களுக்கு இரங்குவேன், இயற்கை வளத்தை ஒரு நாளும் அழிக்க மாட்டேன்

பொன்மொழி :

அழகே உண்மை .உண்மையே அழகு - கீட்ஸ்

பொது அறிவு : 

01.தாவரங்களின் வளர்ச்சி நிலையை அறிய பயன்படும் கருவியின் பெயர் என்ன? 

   ஆக்ஸனோமீட்டர்-வளர்ச்சிமானி 

                      Auxanometer

02. நமது உடலில் இன்சுலினை சுரக்கும் சுரப்பி  எது?

         கணையம் - Pancreas

English words :

destroy-ruin

devote-dedicate

தமிழ் இலக்கணம்: 

 காலப்பெயர்: ஓர் காலத்தைக் குறிக்கும் பெயர்.

எடுத்துக்காட்டு: காலை, மாலை, ஆண்டு.

சினைப்பெயர்: ஒரு பொருளின் உறுப்பைக் குறிக்கும் பெயர்.

எடுத்துக்காட்டு: கண், கை, இலை, பழம்

அறிவியல் களஞ்சியம் :

 பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர் இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம் இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல் ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில் இறக்கின்றன.

அக்டோபர் 24

உலக இளம்பிள்ளை வாத நாள்

 இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது. போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis) என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.

இந் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 90% பேரில் அறிகுறிகள் எதுவும் தோன்றுவதில்லை. எனினும் தீநுண்மங்கள் குருதியோட்டத்துடன் கலந்துவிடின் பல வகையான அறிகுறிகள் தோன்றுகின்றன. பாதிக்கப்படுபவர்களில் 1%க்கும் குறைவானவர்களில் தீநுண்மங்கள் மைய நரம்புத் தொகுதிக்குள் சென்று இயக்க நரம்பணுக்களைத் தாக்குவதனால் தசைநார்கள் பலவீனமுற்றுத் தீவிரமான தளர்வாதத்தை (flaccid paralysis) உருவாக்குகிறது. 


ஐக்கிய நாடுகள் நாள்


1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது.

1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது.

ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை ஐக்கிய நாடுகள் வாரமாகவும் கொண்டாடப்படுகிறது.

நீதிக்கதை

 கடலோரப் பகுதி கிராமமான நல்லூரில் வசித்து வந்த இரத்தினசாமி என்ற எளிய விவசாயிக்கு சொந்தமாக இருந்தது இரண்டு ஏக்கர் நிலம் மட்டுமே. அவருக்கு மாணிக்கம், முத்து என்ற இரு மகன்கள் இருந்தனர். இருவரும் பள்ளிப் படிப்பை முடித்தனர். 

இரத்தினசாமி தனது வறுமையின் காரணமாக மகன்கள் இருவரையும் அழைத்து, நீங்கள் உங்கள் கல்வியை இத்துடன் முடித்துக் கொண்டு என்னைப்போல் விவசாயத்தில் ஈடுபடுகிறீர்களா? என்று கேட்டார். 

கல்வியில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்த மாணிக்கம், அப்பா, நான் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து படித்து, எனக்கு ஒரு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன் என்றான். இளையவன் முத்து, எனக்கு படிப்பில் நாட்டமில்லை. விவசாயம் செய்யவும் விருப்பமில்லை. நான் வியாபாரம் செய்ய விரும்புகிறேன் என்றான். 

இருவருக்குமே, விவசாயத்தில் நாட்டம் இல்லாததால், இரத்தினசாமி தன் நிலத்தை விற்று, கிடைத்த தொகையை இருவருக்கும் சமமாகப் பங்கிட்டு அளித்தார். மாணிக்கம் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து செவ்வனே பயின்று தேறி, நல்லதொரு வேலையில் அமர்ந்தான். முத்து தனக்குக் கிடைத்த தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்து வியாபாரம் தொடங்கினான். 

ஆனால், சில ஆண்டுகளில் வியாபாரத்தில் பெருத்த நட்டம் ஏற்பட்டு முதலீடு செய்த தொகையை முற்றிலும் இழந்து நின்றான். மனமுடைந்து பரிதாபமாக நின்ற முத்துவை நோக்கி மாணிக்கம், தம்பி கல்வி ஒன்றே அழிவற்ற செல்வம். நான் பெற்றுள்ள கல்வி எனும் செல்வத்தினால்தான், எனக்கு நிரந்தர வருமானம் தரக்கூடிய வேலை கிடைத்தது. 

ஒருவன் பெற்றுள்ள கல்வி எனும் செல்வம் காலத்தால் அழியாதது. அதை யாரும் திருடிச் செல்ல முடியாது. அதை யாராலும் சேதமாக்கவும் முடியாது. ஆனால் பணம் அவ்வாறு அல்ல, பணம் எனும் செல்வம் நிலையற்றது என்று கல்வியின் பெருமையை உணர்த்தினார். 


நீதி :

கல்வி யாராலும் அழிக்க முடியாத செல்வம்.

இன்றைய செய்திகள்

24.10.2025

⭐தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு- தமிழக அரசு அனுமதி

⭐சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுக்க 1436 மோட்டார் பம்புகள், 298 வாகனங்கள் தயார்- தமிழக அரசு

⭐ரூ.42.45 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டுள்ள தொல்காப்பியப் பூங்காவை இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

⭐உக்ரைன் போர் விவகாரம்: 2 ரஷிய எண்ணெய் நிறுவனங்கள் மீது அமெரிக்க பொருளாதாரம் தடை

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதம்- ஸ்மிருதி மந்தனா சாதனை.
நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் மந்தனா 109 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மகளிர் ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலில் மந்தனா 2-வது இடத்திற்கு முன்னேறினார்.

Today's Headlines

⭐ Tamilnadu government has approved to provide three free meals every day for sanitation workers .

 ⭐1436 motor pumps and 298 vehicles have been made ready to prevent rainwater from accumulating in Chennai .

⭐Chief Minister M.K. Stalin will open the renovated Tolkappiyam Park for public use today at the cost of Rs. 42.45 crore.

⭐Ukraine war issue: US imposes economic sanctions on 2 Russian oil companies.

 *SPORTS NEWS* 

🏀 Mandhana scored 109 runs in today's match against New Zealand. Smriti Mandhana holds the record for scoring the most centuries in women's ODIs.

Covai women ICT_போதிமரம்