Monday, December 9, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் -- 10.12.2024

    

மனித உரிமைகள் நாள்







திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம் : சூது

குறள் எண்:931

வேண்டற்க வென்றிடினும் சூதினை; வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.

பொருள்:வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது.

பழமொழி :

Better one word in time than two afterward.


வேளை அறிந்து பேசு, நாளை அறிந்து பயணம் மேற்கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :  

 *நான் எந்த உயிரினத்தையும் துன்புறுத்த மாட்டேன். 

*என்னால் இயன்ற அளவு எனது வீட்டிலும் பள்ளியிலும் செடிகள் வளர்ப்பேன்.

பொன்மொழி :

உங்களை நீங்களே அறிவதே ஞானத்தின் தொடக்கமாகும் --- அரிஸ்டாட்டில்

பொது அறிவு : 


1. இந்திய விண்வெளி மையம் இஸ்ரோ அமைந்துள்ள இடம் எது?


விடை: பெங்களூரு

2. பாம்பின் நுரையீரல்களின் எண்ணிக்கை என்ன?


விடை: 1

English words & meanings :

 Stress     -    அழுத்தம்

 Suffering     -     துன்பம்

வேளாண்மையும் வாழ்வும் : 

 கரிம வேளாண்மைக்கு தொழிலாளிகள் மற்றும் அறிவுத் திறன் ஆகிய இரண்டும் மிக அதிக அளவில் தேவைப்படும்..

டிசம்பர் 10

மனித உரிமைகள் நாள்


ஐக்கிய நாடுகள் அவை 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் நாள் உலக மனித உரிமைப் பேரறிக்கை என உலக மக்கள் அனைவருக்குமான வாழ்வுரிமைகளை பிரகடனப்படுத்தியது. அந்த நாளைக் குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 10 ஆம் தேதி உலக நாடுகள் அனைத்தாலும் ”மனித உரிமை நாள்” கொண்டாடப்படுகிறது.

1948 டிசம்பர் 10ஆம் நாள் ஒன்றுக்கூடிய ஐக்கிய நாடுகளின் பொது அவையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை பெருமைப்படுத்தும் பொருட்டு இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐ.நா.வின் பொது அவை நாடுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்களுக்கும் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க 1950 முதல், டிசம்பர் 10 ஆம் நாள் மனித உரிமைகள் நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் அவையின் நிகழ்வுகளில் முதன்மையான இந்நாளில், நியூயார்கில் அமைந்துள்ள அதன் தலைமைப்பீடத்தில் முக்கிய நிகழ்வுகள் இடம்பெறுவது வழக்கமாகும். இந்நாளில் ஐந்தாண்டுக்கு ஒரு முறை வழங்கப்படும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் பரிசு வழங்கப்படும். மேலும் பல அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களும் இந்நாளில் பல முக்கிய நிகழ்வுகளை நடத்துவது வழக்கமாகும்.

நீதிக்கதை

 ஒட்டகங்கள்


ஒருவர் குருவிடம் சென்று, "ஓடிக்கொண்டே இருக்கிறேன் பல பிரச்சனைகள். வீட்டில்,வேலை செய்யும் இடத்தில், கிராமத்தில் என்று எங்கு சென்றாலும் பிரச்சனைகள் தான். என்னால் நிம்மதியாக தூங்கவே இயலவில்லை. எனக்கு தீர்வை சொல்லுங்கள்" என்று  முறையிட்டார்.


அப்போது மாலை நேரம்.குரு அவரிடம் தோட்டத்திற்குச் சென்று "ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன என்று பார்த்து வா. அதன் பின் உனக்கு தீர்வை சொல்கிறேன்" என்றார்.


சென்றவர் திரும்பி வந்து "நூறு ஒட்டகங்களும் நின்று கொண்டு தான் இருக்கின்றன" என்று கூறினான். "நல்லது. நீ சென்று நூறு ஒட்டகங்களும் படுத்தபின் அங்கு இருக்கும் ஓய்வறையில் தூங்கிவிட்டு,காலையில் வந்து என்னை பார்" என்று குரு கூறினார்.


" சரி குருவே", என்று கூறிவிட்டு தோட்டத்திற்கு சென்றவர்,சிறிதும் தூக்கம் இன்றி மிகவும் களைப்புடன் காலையில் வந்து  குருவிடம் "ஐயா இரவு முழுவதும் நான் தூங்கவே இல்லை" என்று கூறினார்.


" என்ன ஆச்சு? " என்றார் குரு. அதற்கு அவர்,"சில ஒட்டகங்கள் தானாகவே படுத்துக் கொண்டன.சில ஒட்டகங்களை மெனக்கெட்டு நான் படுக்க வைத்தேன். சில ஒட்டகங்கள் படுக்கும் பொழுது வேறு சில ஒட்டகங்கள் எழுந்து கொண்டன. ஆக மொத்தத்தில் எல்லா ஒட்டகங்களையும் ஒரே நேரத்தில் படுக்க வைக்க இயலவில்லை. அதனால் நான் தூங்குவதற்கு செல்லவே இல்லை" என்று கூறினார்.

 

குரு சிரித்துக்கொண்டே, "இதுதான் வாழ்க்கை. பிரச்சினைகளை முடிப்பது என்பது ஒட்டகங்களை படுக்க வைப்பது போன்றது. சில பிரச்சனைகள் தானாகவே முடிந்து விடும். சில பிரச்சனைகளுக்கு

நாம் தீர்வு காணலாம். சில பிரச்சனைகளை முடிக்கும் போது வேறு சில பிரச்சினைகள் தோன்றும். அனைத்து பிரச்சனைகளும் முடிந்தால் தான் தூங்க முடியும் என்றால் இந்த உலகத்தில் எவராலும் தூங்க இயலாது.


தீர்க்க முடிந்த பிரச்சனைகளை தீர்த்து விட்டு, மற்றவற்றை காலத்தின் கையில் ஒப்படைத்து விட்டு, உங்களுக்கான ஓய்வறையில்  நிம்மதியாக தூங்குங்கள்" என்றார்.


சில நாட்கள் கழித்து, திரும்பி வந்து குருவிடம் அவர், "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான்  நிம்மதியாக இருக்கிறேன்" என்று கூறினார்.

இன்றைய செய்திகள்

10.12.2024

* தற்காலிக பணியாளர்களுக்கும் மாற்றுத் திறனாளிகள் சட்டம் பொருந்தும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.

* டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

* தமிழகத்​தில் சீசன் முடிந்த பிறகும் காற்​றாலைகளில் இருந்து கூடுதல் மின்​சாரம் கிடைப்​ப​தால், அனல் மின் உற்பத்​தியை மின்​வாரியம் குறைத்​துள்ளது.

* ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமனம்.

* குவாஹாட்டி மாஸ்டர்ஸ் சூப்பர் 100 பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ, அஸ்வினி பொன்னப்பா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

* பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா.

Today's Headlines

* The Madurai Bench of the High Court said that the Persons with Disabilities Act also applies to temporary employees.

* A separate resolution brought in the Tamil Nadu Legislative Assembly was passed unanimously urging the central government to immediately cancel the tungsten mining license and not to issue any mining license without the state government's permission.

* Even after the end of the season in Tamil Nadu, wind turbines produce Electricity so the Electricity Board has reduced the thermal power generation due to the availability of additional electricity 

* Sanjay Malhotra was appointed as the new Governor of RBI.

* India's Tanisha Christo and Ashwini Ponnappa won the Guwahati Masters Super 100 badminton tournament.

* Women's Junior Asia Cup Hockey Tournament: India start with a victory

Covai women ICT_போதிமரம்



No comments:

Post a Comment