Monday, February 26, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.02.2024

  

பொடி பசலை கீரை




திருக்குறள்: 


பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:365

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

விளக்கம்:

ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார். முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்.



பழமொழி :

No smoke with out fire

நெருப்பில்லாமல் புகையாது

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

நான் என் வலியை பொறுமை எனும் வயலில் விதைத்த போது அது மகிழ்ச்சி எனும் பழத்தைத் தந்தது. --கலீல் ஜிப்ரான்

பொது அறிவு : 

1. அரசியல் அமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்?

விடை: 22 மொழிகள்

2.
உலகின் பெரிய ரயில்நிலையம் எது? 

நியூயார்க் (கிராண்ட் சென்ட்ரல் டெர்மினல்)

English words & meanings :

 Holster (n)- a holder made of leather for carrying hand gun கைத்துப்பாக்கி வைக்கப் பயன்படும் ஒரு தோல் உறை
Hysterical (adj) - affected by wildly uncontrolled emotion கட்டுப்படுத்த இயலாத உணர்ச்சியால் பாதிக்கப்படுதல்

ஆரோக்ய வாழ்வு : 

கொடி பசலை கீரை: கொடி பசலைக் கீரைச் சாறு  ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் சிறிது கற்கண்டு சேர்த்துக் கொடுத்தால்  குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கட்டு குணமாகும்.

நீதிக்கதை

 கற்றது எவ்வளவு?


பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிற கங்கை நதியில் ஒரு படகில் ஓடக்காரனும் சில பயணிகளும் பயணித்துக் கொண்டிருந்தார்கள். பயணிகளுள், பண்டிதர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டிருக்கும் ஒருவர், தான் படித்ததைப் பிறருக்குப் போதித்தாலே அவர் இன்னும் பலவற்றைக் கற்றிருக்க முடியும். ஆனால் தான் எல்லாவற்றையும் கற்று விட்டோம் என்ற கர்வம் அதிகம்  தோன்ற அதில் பயணித்தார். அவர் ஓடக்காரனிடம் தனது அறிவை பறைசாற்றத் தொடங்கினார்.

"ஏய் ஓடக்காரா, இப்படி ஒன்றும் தெரியாமல் நீ தற்குறியாக இருக்கிறாயே? பகவத்கீதையை நீ படித்திருக்கிறாயா?'' என்று ஏளனமாக கேட்டார். "ஐயா,சாமி என் அப்பன் கூட அதை படித்ததில்லையே?" என்றான் ஓடக்காரன் அடக்கமாக.''ஓஹோ! அப்படியா? அப்படியானால் உனது வாழ் நாளில் கால் பங்கு மோசமாகிப் போச்சே" என பண்டிதர் சாபம் தருவது போல் சொன்னார்.

"சரி ! அது போகட்டும்! இந்த உலகம் போற்றும் ஒண்ணே முக்கால் அடி திருக்குறளையாவது நீ படித்திருக்கிறாயா?" எனக் கேட்டார்.

அதற்கு ஓடக்காரன் "அதை நான் தொட்டது கூட கிடையாதே,சாமி" என்று வெட்கத்துடன் சொன்னான்.

"தண்டமே ! தண்டமே! இரண்டு பங்கு உன் வாழ்க்கையை வீணாக்கி விட்டாயே!, அது போகட்டும்

பாகவதமாவது வாசித்திருக்கிறாயா?" என்று கேட்டார்.

சிரமத்துடன் படகு செலுத்திக் கொண்டிருந்த ஓடக்காரன் தலை குனிந்து நின்றான்.

"போச்சு! அதுவும் இல்லையா? உன் வாழ்க்கையில்  முக்கால்வாசி நஷ்டமாகி விட்டதே!. இனி நீ என்ன செய்யப்போகிறாய்? கடவுளுக்குத் தான் வெளிச்சம்" என்று பண்டிதர் தன் வருத்தத்தைச் சொல்லி முடித்தார்.

அப்பொழுது கரை புரளும் வெள்ளம் வந்தது. அலை ஒன்றோடொன்று மோதி படகு கவிழ்ந்து விடும் என்ற நிலை தெரிந்தது. நீந்தத் தெரிந்தவர்கள் யாவரும் நதியில் வேகமாகக் குதித்து நீந்திக் கரையேறினார்கள்.

ஓடக்காரனும், பண்டிதரும் மட்டும் தத்தளிக்கும் படகில் இருந்தனர். “சாமி! தண்ணீரில் குதிங்க சாமி. இல்லேன்னா படகு கவிழ்ந்து மூழ்கிடுவீங்க." என்று ஓடக்காரன் எச்சரித்தான். "ஐயோ! என்னப்பா சொல்கிறாய்?, எனக்கு நீச்சல் தெரியாதே அப்பா!" என்று பண்டிதர் சொன்னார். அந்த அவசரத்திலும் ஓடக்காரன், பண்டிதரிடம், "சாமி. எனக்குக் கீதை, பாகவதம் திருக்குறளென்று எதுவுமே தெரியாது. ஆனால் நீச்சல் நன்றாகத் தெரியும். எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்போ முழு வாழ்க்கையையும் இழக்கப் போறீங்களே! மிகவும் வருத்தமா இருக்கு" என்று கூறி நதியில் குதித்துக் கரை சேர்ந்தான். பலவற்றைக் கற்ற பண்டிதர் பரிதவித்துக் கொண்டிருந்தார்.


எல்லாம் அறிந்தவர் என்பது உலகில் இல்லை. "கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு".

இன்றைய செய்திகள்

27.02.2024

*மெரினாவில் கலைஞர் நினைவிடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு க ஸ்டாலின்.

*சிக்கிமின் முதல் ரயில் நிலையம் : அடிக்கல் நாட்டினார் மோடி.

*"ஜி" மெயிலுக்கு போட்டியாக "எக்ஸ்" மெயில்: எலான் மஸ்க் திட்டம்.

*இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

*ரஞ்சித் கோப்பை காலிறுதியில் மத்திய பிரதேச அணி 4 ரன் வித்தியாசத்தில் ஆந்திராவை வீழ்த்தியது.

Today's Headlines

* CM Stalin inaugurated kalaingar 's memorial at Marina.

 *Sikkim's first railway station: Modi laid the foundation stone.

 *"X" Mail will compete with "G" Mail: Elon Musk's plan.

 *India won the 4th Test against England by 5 wickets.

 *Madhya Pradesh beat Andhra Pradesh by 4 runs in Ranjith Trophy quarter finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Sunday, February 25, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02.2024

  

செவ்வாழைப்பழம்




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:364

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்.

விளக்கம்:

மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.


பழமொழி :

No roses with out thorn

முள்ளில்லா ரோஜாக்கள் இல்லை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. பெரியோர் , பெற்றோர்,  ஆசிரியர்களை மதித்து நடப்பேன்.

2. அவர்கள் மனம் புண் படும் படி பேசவோ நடந்து கொள்ளவோ மாட்டேன்.


பொன்மொழி :

மற்றவர்கள் மீதான அக்கறை உணர்வு, நம் வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகிறது. இது தான் மனிதனின் அனைத்து மகிழ்ச்சிக்கும் மூலமாகும். --தலாய் லாமா

பொது அறிவு : 

1.சிங்கப்பூரின் பழைய பெயர்?


விடை: டெமாஸெக்

2. ”மானின் விடுதலை”-கதைப் பாடலின் ஆசிரியர்?

விடை: அழ.வள்ளியப்பா

English words & meanings :

 gaudy - showy ஆடம்பரமான gallent - stately.துணிச்சலான

ஆரோக்ய வாழ்வு : 

செவ்வாழைப்பழம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். கண்களின் ஆரோக்கியத்தையும், நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையையும், சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். பல் வலி, பல்லசைவு போன்ற உபாதைகளையும், விரைவில் குணப்படுத்தும். உடல் எடையை கட்டுப்படுத்தும். 21 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு தீர்வு கிடைக்கும்.

நீதிக்கதை

 இனிப்பும் கசக்கும்

உலகம் போற்றும் சுவாமி விவேகானந்தரின் குருவான சிறந்த ஆன்மீகவாதியாகத் திகழ்ந்த பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஒரு நாள் ஒரு பெரிய கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். அவர் கூறும் கருத்துக்களை அனைவரும் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று ஒரு பெண்மணி தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு வந்து அவர் முன் நின்றாள்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் அந்தப் பெண்மணியை பார்த்து."தாயே உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார்.

உடனே அந்த அம்மையார் "சுவாமி என் மகன் அதிகமான அளவு இனிப்பு சாப்பிடுகிறான். அது உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்று அவனுக்குத் தெரியவில்லை.அதனால், தாங்கள் தான் அவன் அதிக அளவில் இனிப்புகளை சாப்பிடக்கூடாது என்று தகுந்த அறிவுரை கூறவேண்டும் என்றாள்.

அவள் மேலும் சொன்னாள். "நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவன் என் சொல்லைக் கேட்கமாட்டேன் என்கிறான். அடித்துக்கூடப் பார்த்தேன், ஒரு பயனுமில்லை என்றாள்.

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் அந்தப் பெண்மணியைப் பார்த்து, "சரி தாயே! நீங்கள் உங்கள் மகனை ஒரு வாரம் கழித்து என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார்.

அந்தப் பெண்மணியும் பதில் ஏதும் பேசாது. சுவாமியிடம் விடை பெற்றுக்கொண்டு, தன் ஐந்து வயது மகனை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்குச் சென்று விட்டாள்.

ஒரு வாரம் கடந்தது. அந்தப் பெண்மணி மீண்டும் தன் மகனை அழைத்துக் கொண்டு ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் பார்க்க வந்தாள்.

 அந்தப் பெண்மணியை அன்புடன் வரவேற்றார். பிறகு அவளுடைய மகனைப் பார்த்து, "தம்பி இனிப்புகள் அதிகம் சாப்பிடுகிறயாமே? அவ்வாறு அதிகம் சாப்பிடக்கூடாது. அவ்வாறு அதிகம் சாப்பிட்டால் அது உன் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். உன் வயிற்றில் பூச்சிகள் உருவாகும்". என அறிவுரை கூறினார்.

அந்தப் பெண்மணிக்கு ஒரு சந்தேகம் தோன்றியது. அதை சுவாமியிடம் கேட்டு விடலாம் என்று எண்ணிய அவள் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை பார்த்து "சுவாமி, நான் முதல் நாள்,என் மகனை உங்களிடம் அழைத்து வந்த போதே அதிகமாக இனிப்புகளை சாப்பிட்டால் உடல் நலம் பாதிக்கும் என்று என் மகனுக்கு அறிவுரை கூறியிருக்கலாமே? ஏன் ஒரு வாரம் பொறுத்து வரச் சொல்லி எளிய அறிவுரை கூறுகிறீர்கள்?" என்று கேட்டாள்.

அதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணர் புன்னகை புரிந்தபடியே, "தாயே! நீங்கள் உங்கள் மகனை முதல் முறையாக அழைத்து வந்த போது நானே அதிக அளவில் இனிப்பு சாப்பிடுபவனாக இருந்தேன். அன்னிலையில் நான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறும் தகுதியை அப்பொழுது பெற்றிருக்கவில்லை. பிறகு ஒரு வாரம் கழித்து வரச் சொன்ன போது நான்

இனிப்புகள் சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். அதனால்தான் உங்கள் மகனுக்கு அறிவுரை கூறினேன்" என்றார்.

அந்தத் தாய் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரை புகழ்ந்த படியே சென்றாள். அந்தச் சிறுவனும் அன்று முதல் அதிகமான அளவில் இனிப்புகளை சாப்பிடுவதை நிறுத்தி விட்டான்.

இதிலிருந்து நாம் என்ன கற்றுக் கொண்டோம்? எதற்குமே ஒரு தகுதி வேண்டும். பிறருக்கு அறிவுரை கூறுவதற்கு முன்பு நாம் நல்வழியில் நடக்கிறோமா என்று தெரிந்துகொள்ள வேண்டும். நாம் தவறான வழியில் நடந்து கொண்டு மற்றவர்களை நல்வழியில் நடக்குமாறு அறிவுரை கூறக்கூடாது. அதில் பயனில்லை. தகுதியுள்ள நல்லவர்கள் யாவரையும் நல்வழிப்படுத்துவர்.

இன்றைய செய்திகள்

26.02.2024


* தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்.

*தூத்துக்குடியில் ரூபாய் 16,000 கோடி மின்சார வாகன ஆலைக்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல்.

*தனியாரிடம் மின் மீட்டர் வாங்க நுகர்வோருக்கு மின்வாரியம் அனுமதி அளித்துள்ளது.

*மலைப்பகுதி மகளிருக்கும் இன்று முதல் இலவச பயணம் அமைச்சர் சிவசங்கர் தகவல்.

*இந்தியாவில் அதிக டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் எடுத்து புதிய சாதனை படைத்த அஸ்வின்.

Today's Headlines

*Chance of rain in coastal areas of South Tamil Nadu: Meteorological Centre.

 * CM Stalin lays foundation stone for Rs 16,000 crore electric vehicle plant in Thoothukudi.

 *Energy Board has allowed consumers to buy electricity meters from private parties.

 *Minister Sivashankar informs that free travel from today onwards for the women of the hilly regions.

 *Ashwin set a new record by taking 500 wickets in most Test cricket in India.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, February 22, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.2024


  




திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:363

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்பது இல்.

விளக்கம்:

எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.


பழமொழி :

No rains ; No grains

மாரியல்லாது காரியமில்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

மகிழ்ச்சியாக இருக்கும்போது நீங்கள் அழகாக இருக்கிறீர்கள். --ஆஸ்கார் வைல்ட்

பொது அறிவு : 

1. நம் உடம்பிலேயே மிகவும் கடினமான பகுதி எது?

விடை: பற்களிலுள்ள எனாமல்

2. X கதிர்களின் மின்னூட்டம்?

விடை: ஓரலகு எதிர் மின்னூட்டம்

English words & meanings :

gaudy - showy , stately ஆடம்பரமான    gallant - courageous துணிச்சலான

ஆரோக்ய வாழ்வு : 

கானாவாழை: சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய குழிப்புண்களை ஆற்றுவதற்கு, இந்த கானாவாழையை அரைத்து பற்று போட்டாலே நல்ல பலன் கிடைக்கும்.. அதேபோல, நீண்ட நாட்களாக படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு முதுகிலும், இடுப்பு மற்றும் கழுத்து பகுதிகளிலும் படுக்கை புண்கள் ஏற்படும்.. இந்த புண்களை ஆற்றக்கூடிய சக்தி, குளிர்ச்சி நிறைந்த கானாவாழைக்கு உண்டு.

பிப்ரவரி 23

சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது

நீதிக்கதை

 அதியமான் வழங்கிய நெல்லிக்கனி

தகடூர் என்ற ஊரை அதியமான் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவருடைய அரச சபைக்கு அறிஞர் ஒருவர் வந்தார். அவரிடம், நீண்ட நாள் வாழ்வதற்கு ஏதாவது வழி இருக்கிறதா?" என்று அதியமான் கேட்டார்.

"மன்னரே! ஒரே ஒரு வழி உள்ளது. ஆனால் அது மிகவும் கஷ்டமானதாயிற்றே" என்றார் அறிஞர்.

"எவ்வளவு கடினமானதாயினும் சரி, நீங்கள் கூறுங்கள். நான் அவ்வாறு செய்யச் சித்தமாக இருக்கிறேன்" என்று அதியமான் ஆர்வத்துடன் கேட்டார்.

"தகடூரை அடுத்து குதிரை மலை என்ற மலை ஒன்றுள்ளது. அங்கே ஆழங்காண முடியாத பள்ளம் இருக்கிறது. அந்தப் பள்ளத்திலே அபூர்வமான நெல்லி மரம் உள்ளது. அந்த மரத்தில் பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நெல்லிக்கனி உண்டாகும். அதுவும் ஒரே ஒரு நெல்லிக்கனி மட்டுமே உண்டாகும். அதனை உண்டால், நெடுநாள் வாழமுடியும்" என்றார் அறிஞர்.

"மிக்க நன்றி, நான் குதிரை மலைக்குச் சென்று பார்க்கிறேன்" என்று உரைத்த அதியமான் மறுதினமே குதிரை மலைக்குப் பயணமானார். ஓங்கி உயர்ந்த குதிரை மலையை அடைந்தார். அதன் உச்சிவரை ஏறி, பள்ளம் எங்கே இருக்கிற தென்று சுற்றுமுற்றும் பார்த்தார். மலையின் மறுபுறம் ஆழ்ந்த பள்ளம் இருப்பதைக் கண்டார். அறிஞர் கூறிய பள்ளம் இதுதான் என்று எண்ணி, பள்ளத்தை நோக்கி மெதுவாக நடந்தார். சிறிது கால் பிசகினாலும் கீழே விழுந்து விடும் அபாயத்தை அறிந்து அடிமேல் அடிவைத்துச் சென்றார்.

பள்ளத்தை நோக்கிய போது நெல்லி மரம் ஒன்று இருப்பதைக் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி கொண்ட அதியமான், மரத்தில் கனி ஏதேனும் இருக்கிறதா என்று தேடினார். தேடியபோது ஒரே ஒரு கனி தெரிந்ததும் அதியமானின் மகிழ்ச்சி அதிகரித்தது. மிகுந்த ஆர்வமுடன் மரத்திலிருந்து கனியைப் பறித்தார். அக்கனியை

பத்திரமாக எடுத்துக் கொண்டு, பள்ளத்தைக் கடந்து மலைமீது ஏறி, தகடூர் வந்தடைந்தார். மறுநாள் நெல்லிக் கனியை உண்ணலாம் என்று நினைத் திருந்தார்.

மறுநாள் காலையில் ஒளவையார் அதியமானைக் காண வந்தார். இருவரும் நெடுநேரம் பேசி மகிழ்ந்தார்கள். அதியமான், குதிரை மலையிலிருந்து கொண்டு வந்த நெல்லிக்கனியை ஔவையாருக்கு அளித்து உண்ணுமாறு உபசரித்தான் .

ஒளவையாரும் கனியை உண்டார், "மன்னா, இக்கனியின் சுவை மிகவும் நன்றாக உள்ளதே. இது எங்கு கிடைக்கிறது?" என்று கேட்டார். ஒளவையார் கனியை உண்டபின்பு, அதைப்பற்றிய விபரங்களை மன்னர் எடுத்துரைத்தார். அதைக் கேட்டு ஔவையார் மனம் நெகிழ்ந்தார்.

"வலம்படு வாய்வாள் என்று தொடங்கி சாதல் நீங்க எமக் கீந்தனையே” என்று பாடி, அதியமானை வாழ்த்தினார்.

"மன்னனாகிய நான் நெடுநாள் வாழ்வதை விடவும் தங்களைப் போன்ற மண்ணுலகினருக்கு நல்லறிவுரைகள் அளிப்பவரல்லவா நெடு நாள் வாழ வேண்டும்" என்றார் மன்னர்.

அதியமானின் புகழ் அவருடைய வள்ளன்மையால் பன்மடங்கு அதிகமாகியது.

இன்றைய செய்திகள்

23.02.2024

*மருந்துகளின் பெயர்களை பெரிய ஆங்கில எழுத்துக்களில் தான் எழுத வேண்டும்- அரசு அதிரடி.

*சென்னை, கோவையில் உச்சம் தொட்டது: நெற்களஞ்சியமான டெல்டாவில் அரிசி விலை கடும் உயர்வு.

*கலைஞர் நினைவிட திறப்பு விழா: எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்க மு க ஸ்டாலின் அழைப்பு.

*6 முதல் 12 ஆம்  வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உண்டு உறைவிட பள்ளி அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்.

*80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கப்படும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.

*ஐபிஎல் அட்டவணை வெளியீடு: சென்னையில் முதல் போட்டி தொடங்க இருக்கிறது.

Today's Headlines

* Names of medicines should be written in capital (English) letters only - Government Ordered.

 * Rice Price reached Peak in Chennai and Coimbatore due to the sharp rise  in the Rice prices rice-rich Delta.

 *Artist's Memorial Inauguration: CM invites Opposition MLAs to participate.

 *MoU to set up boarding school for students studying from 6th to 12th standard.

 *Minister Anbil Mahesh announced that 80,000 teachers will be provided with portable computers.

 *IPL schedule release: First match to begin in Chennai.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Wednesday, February 21, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.02.2024

  





திருக்குறள்: 

பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : அவா அறுத்தல்

குறள்:362

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

விளக்கம்:

விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்.

பழமொழி :

No Pains ; No Gains

உழைப்பின்றி உயர்வு இல்லை

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

இந்த வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சி மட்டுமே உள்ளது, நேசிப்பது மற்றும் நேசிக்கப்படுவது. --ஜார்ஜ் சாண்ட்

பொது அறிவு : 

1. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்.

விடை: 15 ஆண்டுகள்

2. ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?

விடை: பாரதிதாசன்

English words & meanings :

 engraver - Carver செதுக்குபவர். evidence - proof ஆதாரம்

ஆரோக்ய வாழ்வு : 

கானாவாழை :  இந்த கீரை குளிர்ச்சியை தரக்கூடியது.. அதாவது ரத்த மூலத்தையே குணமாக்கக்கூடிய அளவுக்கு குளிர்ச்சி வாய்ந்தது என்கிறார்கள்.. இந்த கீரையுடன் துத்தி இலைகளையும் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தாலே ரத்த மூலம் குணமாகுமாம்.. சிறுநீர் எரிச்சலும் தணிந்துவிடும். உடலிலுள்ள சூட்டை அகற்றுவதுடன், தீக்காயம்வரை மொத்தத்தையும் போக்கக்கூடியது.

பிப்ரவரி 22

ராபர்ட் பேடன் பவல் பிரபு அவர்களின் பிறந்தநாள்


ராபர்ட் பேடன் பவல் பிரபு (Robert Baden-Powell) (பெப்ரவரி 22, 1857 - ஜனவரி 8, 1941) சாரணர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆவார். இவர் இங்கிலாந்தில் பிறந்த ஆங்கிலத் தளபதி. 1907 ஆம் ஆண்டு சாரணர் இயக்கத்தைத் தோற்றுவித்தார். 1910 இல் சிறுமிகள் சாரணர் இயக்கத்தையும் தொடங்கினார்.

இளைஞர்களுக்கான சாரணியம் (Scouting for Boys) என்ற நூலை 1908 ஆம் ஆண்டு பதிப்பித்தார். ஆப்பிரிக்காவிற்குத் திரும்பிய பேடன் பவுல் தனது புத்தகமான எய்ட்ஸ் டு ஸ்கவுட்டிங் (Aids to Scouting) வெற்றிகரமாக விற்பனை ஆவதனையும் அவை பல இளைய மற்றும் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதற்குப் பயன்படுவதையும் கண்டார். 1907 ஆம் ஆண்டு சாரணியம் ஓர் சோதனை முயற்சியாக 20 சிறுவர்களுடன் தொடங்கியது. முதலில் தேசிய ரீதியில் துவங்கப்பட்ட இம்முயற்சி பின்னர் உலக அளவில் புகழ்பெற்றது. 1920 இல் முதலாவது உலக சாரணிய ஜம்போரியானது ஒலிம்பியாவில் நடைபெற்றது.

மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது அவர்களின் நினைவுநாள்




மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) (Abul Kalam Muhiyuddin Ahmed) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.[1] பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.

நீதிக்கத

குரு ஒருவருக்கு, ஒரு தனவந்தர்

பசுவைத் தானமாக அளித்தார். அந்தப் பசுவின்

கொம்புகளின் முனையில் தங்கத்தால் கொப்பி அணிவிக்கப்பட்டிருந்தது. பசுவின்மீது, மிகவும் விலையுயர்ந்த, அழகிய வேலைப்பாடு நிறைந்த போர்வையைப் போர்த்தி, தானமாக அளித்தார். தானம் பெற்ற குருவும் மிக்க மகிழ்ச்சியடைந்தார். பசுவின் தலைக்கயிற்றைக் கைகளால் பிடித்துக் கொண்டு, தம்முடைய வசிப்பிடம் நோக்கி நடந்தார். அவருடைய வீடு சற்று தொலைவில் இருந்தது. நடந்து செல்லும் போது, நான்கு திருடர்கள் பசுவின் கொம்புகளில் உள்ள தங்கக் தொப்பிகளைப் பார்த்தார்கள். எப்படியாவது பசுவைக் கவர்ந்து செல்ல வேண்டுமென்று அவர்கள் நால்வரும் திட்டமிட்டார்கள்.

குருபசுவைக் கையில் பிடித்தபடியே நடந்து சென்றபோது ஒரு திருடன் அவருக்கு எதிரில் வந்தான்.

"ஐயயோ, ஏனய்யா புலியைக் கையில் பிடித்துக் கொண்டு போகின்றீர்? உமக்குப் பைத்தியமா என்று கேட்டுவிட்டு பயப்படுவது போல நடித்தான். “ஏனப்பா, இது புலி இல்லை பசு. இது கூடவா உனக்குத் தெரியவில்லை?” என்று குரு சிரித்துக் கொண்டே நடக்கலானார்.

சற்றுதூரம் சென்றதும் மற்றொரு திருடன் அவருக்கு எதிரில் வந்தான். குருவுக்கு அருகில் வந்து விட்டு, பிறகு சட்டென்று சில அடிகள் பின்னால் சென்றான். பின்பு, "இதென்ன அநியாயம்? நாட்டில் ஜனங்கள் நடக்கும் பாதையில் புலியுடன் போகிறீர்களே, புலி யாரையாவது அடித்து விட்டால் என்ன ஆகும்?" என்று திருடன் கேட்டதும், குரு தாம் கையில் பிடித்திருந்த பசுவை ஏற இறங்கப் பார்த்தார்.

"நீ என்ன பார்வை இல்லாதவனா? பசு மாட்டைப்போய் புலி என்கிறாயே, போ, போ உன் வழியைப் பார்த்துக் கொண்டு" என்று பதிலளித்து விட்டு நடந்தார்.

"நான் சொல்வதைச் சொல்லிவிட்டேன், பிறகு உன்பாடு" என்று கூறிவிட்டு திருடன் சென்று விட்டான்.

குரு, பசுவை திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார். பசுவைப் போய் புலி என்று ஏன் சொன்னார்கள் என்று யோசித்தபடியே நடந்தார்.

எதிரில் மூன்றாவது திருடன் வந்தான் “புலி, புலி ஓடி வாருங்கள். புலியை ஊருக்குள் அழைத்துப் போகிறான்" என்று திருடன் கூச்சலிட்டதும் குருவிற்கு சந்தேகம் வந்தது. பயம் தோன்றியதும், பசுவின் தலைக்கயிற்றை விட்டுவிட்டு, விலகி நடக்க ஆரம்பித்தார்.

நான்காவது திருடன் அப்போது அவர் முன்னால் வந்து "ஐயா, உங்கள் பின்னால் புலி ஒன்று வருகிறது. அது உங்களைக் கடித்துத் தின்று விடலாம். வாருங்கள் ஓடலாம்" என்று கூறியதும் குரு பசுவை, புலி என்றே நம்பி விட்டார். உடனே வீட்டை நோக்கி ஓடலானார்.

அவர் ஓடியபின்பு நான்கு திருடர்களும் பசுவை ஒட்டிக் கொண்டு தங்கள் இருப்பிடம் சேர்ந்தார்கள்.

"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு"

 யார் எதைச் சொன்னாலும் அதிலுள்ள

உண்மையை அறிந்து கொள்வதுதான் அறிவுடைமையாகும்.

இன்றைய செய்திகள்

22.02.2024

*"தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை 2024" முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டார்.

*மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி நினைவிடம் 26 ஆம் தேதி திறப்பு.

*ஏற்காடு மலை கிராமங்களில் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபடும் காட்டெருமைகள்.

*தென் மாவட்டங்களில் நாளை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்பு.

* திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, 
சகோதரி  செ.காவியா இந்திய கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ளார், 
துருக்கியில் நடைபெறும் உலகநாடுகள் பங்குகொள்ளும் கால்பந்து போட்டியில் இந்திய அணியில் விளையாட உள்ளார்.

Today's Headlines

*"Tamil Nadu State Women's Policy 2024" is released by Chief Minister M K Stalin.

 *"Karunanidhi Memorial" at Marina beach will be inaugurated on 26th.

 *Bisons have entered  hill villages of Yerkad and  rampaged the villages.

 *Chance of rain again from tomorrow in southern districts.

 *Thiruvarur District, Mannargudi,
Sister S. Kavya has made it to the Indian football team.
She is going to play for the Indian team in the World Cup in Turkey.
 Prepared by

Covai women ICT_போதிமரம்