Sunday, April 23, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.04.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: புறங்கூறாமை

குறள் எண்: 184
கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.

பொருள்:
நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு.

பழமொழி :

A sound mind in a sound body

வலுவான உடலில் தெளிவான மனம்

இரண்டொழுக்க பண்புகள் :

1. வாழ்க்கையில் ஒரு செயலை ஆரம்பிப்பதற்கு முன், எவ்வாறு செய்து முடிக்க போகிறோம் என்று திட்டமிட்டு கொள்ள வேண்டும். 

2. திட்டமிடுதல் மிக முக்கியம். திட்டமிடுவோம் செயல்படுவோம்

பொன்மொழி :

ஒரே ஒரு முறை நடந்தால் அது தடமாக மாறாது. அதே போல் உங்கள் லட்சியத்தை ஒரே ஒருமுறை நினைப்பதன் மூலம் அடைய முடியாது அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்

பொது அறிவு :

  1. உப்பு ஏரிகள் அதிகமாக காணப்படும் மாநிலம் எது? 

 இராஜஸ்தான்.

 2. வடகொரியா தென்கொரியா ஆகியவற்றை பிரிக்கும் கோடு எது? 

 38வது இணை கோடு

ஆரோக்ய வாழ்வு :

உலகத்தின் ஆரோக்யமான பழங்களில் தர்பூசணியும் ஒன்று. அதில் 92% நீர் சத்து இருப்பதால் நாள் முழுவதும் உங்கள் உடலை நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிண்ணம் தர்பூசணி பழங்களில் வெறும் 46 கலோரிகளே உள்ளன. மேலும் இந்த பழத்தை பற்றி நாம் அறிந்திராத உண்மை என்னெவென்றால் இப்பழம் ஒரு எதிர்மறை கலோரி உணவு ஆகும். இது எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பழம் ஆகும்.


ஏப்ரல் 24


ஜி. யு. போப் அவர்களின் பிறந்தநாள்


ஜி. யு. போப் (George Uglow Pope, ஏப்ரல் 24, 1820 - பெப்ரவரி 11, 1908) கனடாவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராகத் தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்குச் சேவை செய்தவர். திருக்குறள், நாலடியார், திருவாசகம் ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்



சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் அவர்களின் பிறந்தநாள்

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் (Sachin Ramesh Tendulkar About this soundஒலிப்பு , பிறப்பு ஏப்ரல் 24, 1973) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட வீரரும் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் ஆவார்.[4] துடுப்பாட்ட விளையாட்டில் எல்லா காலங்களில் விளையாடிய வீரர்களில் சச்சின் சிறந்த மற்றும் மிகவும் மதிக்கப்படும் வீரராக பரவலாகக் கருதப்படுகிறார்.[5].[6] இவர் பதினொரு வயதுமுதல் துடுப்பாட்டம் விளையாடி வருகிறார். தனது பதினாறாவது வயதில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 1989 இல் கராச்சியில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டத்தில் முதன்முறையாக விளையாடினார்.[7] ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக இருநூறு ஓட்டங்களை எடுத்தவர் இவர் ஆவார். பன்னாட்டுப் போட்டிகளில் நூறு முறை நூறு (துடுப்பாட்டம்) எடுத்தவரும் இவர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டம் , ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே[8] மேலும் பன்னாட்டுச் துடுப்பாட்டப் போட்டிகளில் 30,000 ஓட்டங்களைக் கடந்த ஒரே வீரரும் ஆவார்.




நீதிக்கதை

பொம்மைகள்


ரகு வண்ணத்தாள்களில் சின்ன சின்னதாய் குருவி, கிளி, வாத்து, மயில் என்று பொம்மைகள் செய்து கொண்டிருந்தான். வீட்டிற்குள் நுழைந்த வரதன் மகன் கத்திரியும், தாளுமாக இருந்த கோலத்தைப் பார்த்து மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. கோபம் தலைக்கு ஏறியது.


படிடா என்றால் படிக்க மாட்டேன் என்கிறாய். எப்பொழுது பார்த்தாலும் கிளியும், வாத்துமா செய்து வீடு முழுவதும் குப்பை போடுவது தான் மிச்சம். ஒரு பைசாவிற்குகூட பிரயோஜனம் இருக்கிறதா? இப்படி இருந்தா எப்படிடா பிழைக்கப் போகிறாய். நாலுபேரைப் போல் நல்லா படிக்கணும், நாளை வேலைக்குப் போக வேண்டும் என்கிற எண்ணமே வராதாடா என்று கோபமாக கத்தியவர்.


ரகு முதுகில் இரண்டு அடி போட்டார். செய்து வைத்திருந்த பொம்மைகளை காலால் எட்டி உதைத்தார்.


ரகுவுக்கு தன்னை அடிக்கும் போது கூட வலிக்கவில்லை. ஆனால் பொம்மைகளை உதைத்தது மனதில் வலித்தது. கலை நயமாக தான் வடித்த பொம்மைகளைப் பார்த்து பாராட்ட வேண்டாம். இப்படி எட்டி உதைக்காமல் இருந்திருக்கலாமே என்று எண்ணி அழுதான் ரகு. தோட்டத்தில் துணிகளை துவைத்து காயப் போட்டுவிட்டு வந்த மேகலா, ஏண்டா ரகு அழுகிறாய் எனப்பதறியபடி உள்ளே வந்தாள். பொம்மைகள் சிதறிக் கிடப்பதையும் தன கணவர் துணி மாற்றிக் கொண்டு இருப்பதையும் பார்த்த மேகலா நிலைமையை புரிந்து கொண்டாள். ரகுவை சமாதானப்படுத்திவிட்டு, கீழே சிதறிக்கிடந்த பொம்மை தாள்களை எடுத்து ஒழுங்குபடுத்தினால் மேகலா.


அந்த சம்பவத்திற்கு பின் ரகுவரன் மனதில் ஒரு வைராக்கியம் வந்து விட்டது. இந்த பொம்மைகளை வைத்து ஏதாவது செய்து சாதிக்க வேண்டும் என்று. அவனுக்கு பக்க துணையாக இருந்தாள் அன்னை மேகலா. காலங்கள் கடந்தன. ஆண்டுகள் பல தாண்டியபோது ஒரு நாள் சென்னையில் நீண்ட வரிசையில் மக்கள் கூட்டம். புதுமையான ஓவியக்கண்காட்சியை காண்பதற்குதான் இவ்வளவு கூட்டம், பார்த்தவர்கள் எல்லாம் பரவசப்பட்டார்கள். பூங்கா, கோவில், மசூதி, தேவாலயம், மலை, மலர்க்காடு இப்படி எண்ணிலடங்கா கண்ணைக் கவரும் இயற்கையாக அமைந்தது போன்ற ஓவியங்கள் கண்ணாடிப் பெட்டிக்குள் அழகாக காட்சி அளித்தது. நல்ல விலைக்கு விற்பனையும் ஆனது.


ரகுவை மட்டும் பாராட்டவில்லை. அவன் பெற்றோரையும் பாராட்டினார்கள். அவன் தந்தையின் மனமோ, கூனிக் குறுகிப் போனது. தன் தவறை எண்ணி அவர் உணர்வுகளை உணர்ந்து கொண்டான் ரகு.


அப்பா என்று அழைத்தான். தன் உணர்வுகளில் இருந்து மீண்டு வந்த வரதன், என்ன என்பது போல் பார்த்தார். பக்கத்தில் வந்த ரகு இந்த அளவிற்கு நான் வளர காரணமே எனது அப்பா, அம்மாவின் ஒத்துழைப்பு தான் என்று பேட்டி கொடுத்தான். அந்த வார்த்தைகளைக் கேட்ட வரதன் நெகிழ்ந்து போனார். படிப்பு மட்டும் உயர்வுக்கு காரணமில்லை. குழந்தைகள் எதை விரும்புகிறார்களோ அந்த துறையில் ஊக்கப்படுத்தினால் அந்த துறையில் அவர்கள் சாதனையாளர்கள் என்றார் வரதன்.


காற்று உள்ள போதே தூற்றிக்கொள் வாழ்த்துக்கள் என கைகுலுக்கி விடைபெற்றார் பேட்டி எடுத்த நண்பர்.

இன்றைய செய்திகள்

24.04. 2023

* 12 மணி நேர பணி சட்டத்துக்கு தொடரும் எதிர்ப்பு: திரும்பப் பெற பல்வேறு கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்.

* தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.

* மாணவ, மாணவிகளின் நலன் கருதி கூட்டுறவு வங்கிகள் மூலமாக சிறுசேமிப்புத் திட்டம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

* ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வணிகரீதியாக இஸ்ரோ செலுத்திய பிஎஸ்எல்வி-சி55 ராக்கெட் பயணம் வெற்றி.

* வரும் செப்டம்பரில் இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

* இந்த ஆண்டு 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா: அமெரிக்க அமைச்சர் டொனால்டு லூ தகவல்.

* உலகக் கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கம்.

* ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி.

Today's Headlines

* Continued opposition to 12-hour work law: Various party leaders urge withdrawal.

 * Heavy rain likely in 15 districts of Tamil Nadu: Meteorological Department information.

* Cooperative Minister K.R.Periyagaruppan has said that steps will be taken to start a small savings scheme through cooperative banks for the welfare of students.

* ISRO successfully launched PSLV-C55 rocket from Sriharikota.

 * US President Joe Biden is coming to India in September.

 * Visa for 10 lakh Indians this year: US Minister Donald Lew informs.

 * 2 gold medals for India in Archery World Cup.

 * Bengaluru win by defeating Rajasthan.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Thursday, April 20, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.04.2023

  திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: வெஃகாமை

குறள் எண்: 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

பொருள்:
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்

பழமொழி :

Do not count your chickens before they are hatched

கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 

2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.

பொன்மொழி :

நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரண மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.

பொது அறிவு :

1. தேசிய விளையாட்டு தினம் எப்போது? ஆகஸ்ட் 29 . 2.ராணுவ தினம் எப்போது ? ஜனவரி 15.

English words & meanings :

 starvation - suffering due to lack of food. பட்டினியால் கஷ்டப்படுதல்

ஆரோக்ய வாழ்வு :

நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை தவிர்க்கலாம் என்ற பழமொழி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்? ஆம் அது உண்மைதான். உடலை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் வைட்டமின் C ஆப்பிளில் உள்ளது. மேலும் நரம்புகளின் ஆரோக்யத்திற்கும் ஆப்பிள் சிறந்தது. எடை குறைய உதவி, கெட்ட கொழுப்பை அகற்றவும் உதவுகிறது. மேலும் சர்க்கரை நோய், மார்பக புற்று நோய், ஸ்ட்ரோக் போன்ற ஆபத்துகளிலிருந்தும் உங்களை காப்பாற்றுகிறது.




கணினி யுகம்

Ctrl + Shift : Switch the keyboard layout when multiple keyboard layouts are available. Ctrl + Spacebar : Turn the Chinese input method editor (IME) on or off.

நீதிக்கதை

கதை :

ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. கண்களைத் திறந்து பார்த்தார். உனக்கு என்ன வேண்டும்? சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டது. 


முனிவர், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசி கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி சென்றது. காட்டில் திரிந்த பாம்பு ஊருக்குள் வந்தது. நாம் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே. நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது. 


அதனால் அந்தப் பாம்பு ஊரில் உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடியது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள். அந்த பாம்பு யாரையும் தொந்தரவு செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது. ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். அப்போது பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. பாம்பு இரவானதும் அந்த இடத்தை விட்டு விட்டு காட்டை நோக்கி சென்றது. அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயத்துடன சென்று முனிவர் முன் நின்றது. 


அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது. 


உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்டவேண்டியது தானே? பாம்புக்குப் புரியவில்லை. அது என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று கேட்டது. ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன். 


உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள், சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே, அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார். 


சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக் கூவியவாறு ஓடினர். மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர். பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது. அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமைய வேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு. அதே போல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு. 


நீதி :

தன்னிடம் உள்ள வலிமை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.

இன்றைய செய்திகள்

21.04. 2023

* தூத்துக்குடியில் 60 அடி தூரம் கரையை தாண்டி வந்த கடல்நீர்: பகல் நேரம் என்பதால் பெரும் சேதம் இல்லை.

* தமிழகத்தில் கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கவும், வளர்க்கவும்  அரசுக் கல்லூரிகளில் பயிலும் 200 மாணவர்களுக்கு கலைப் பயிற்சிகள் ரூ.1.7 கோடியில் நடத்தப்படும் என கலை,பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

* புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு மற்றும் அரசின் பங்கான ரூ.61,251.16 கோடி தொகை, எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து 5 வீரர்கள் உயிரிழப்பு.

* இந்தியாவின் 90 சதவீத இடங்கள், குறிப்பாக டெல்லியின் அனைத்துப் பகுதிகளும் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எதிர்காலத்தில் ஒளியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோன்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா உளவுத் துறை ஆவணம் தெரிவித்துள்ளது.

* சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

Today's Headlines

* In Thoothukudi sea water passes across the shore for about 60ft: As it was day time there was no major damage occur

* Art, Culture and Archeological Minister Thangam Thennarasu has announced that 200 students studying in government colleges will be given art training at a cost of Rs.1.7 crore to preserve and develop art forms in Tamil Nadu.

 * According to the Finance Department's Policy Brief, Rs 61,251.16 crore of government employees' share in the new pension scheme and the government's share has been invested in LIC.

* Army vehicle caught fire in Jammu and Kashmir, 5 soldiers were died.

 * According to the study, 90 percent of the places in India, especially all parts of Delhi, are at risk of being affected by the heat wave.

 * China plans to develop spy drones that can travel three times the speed of light in  future, according to a US intelligence document.

 * Indian Team was Announced for Suthirman cup Badminton Tournament

 * Algarz has advanced to the 3rd round of the Barcelona Open tennis tournament.
 Prepared by

Covai women ICT_போதிமரம்