Sunday, July 14, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.07.2024

  

காமராஜர்




திருக்குறள்: 

பால்,: பொருட்பால்

அதிகாரம்:கேள்வி

குறள் எண்:419

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.

பொருள்: நுட்பமான பொருட்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர்,
வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக முடியாது.

பழமொழி :

Strike while the iron is hot. Make hay while the sun shines.


அலை மோதும்போதே தலை முழுகு; 

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

இரண்டொழுக்க பண்புகள் :


1.என்னை விட வயதில் மூத்தோரை மரியாதையுடன் நடத்துவேன். என்னால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு செய்வேன்.

 2.என்னை விட இளையோரிடம் அன்பாக நடந்து கொள்வேன்.
அவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பேன்.

பொன்மொழி :

எவ்வளவு பெரிய கணக்காக இருந்தாலும் அதற்கு தீர்வு காண வழி இருக்கும்போது, உனது பிரச்சனைக்கான தீர்வுக்கும் ஏதேனும் வழி இருக்கும். 

பொது அறிவு : 

1. சூரிய ஒளி பூமியை வந்தடைய எடுத்துக்கொள்ளும் நேரம்?

விடை: 8 நிமிடங்கள்

2. வீட்டிற்கு ஒரு பியானோ உள்ள நாடு எது?

விடை: இங்கிலாந்து

English words & meanings :

Hail- வணங்கு,

Submission- சமர்பித்தல் 

வேளாண்மையும் வாழ்வும் : 

பழங்காலத் தமிழகத்தில் பரவலாக நெல், கரும்பு, சிறுதானியங்கள், மிளகு, பருப்புவகைகள், தென்னை, அவரை, பருத்தி, வாழை, புளி, சந்தணம் போன்றவை பயிரிடப்பட்டன. நெல் முதன்மைப் பயிராக இருந்தது.

ஜூலை 15

காமராசர்  அவர்களின் பிறந்த நாள்



காமராசர் (காமராஜர்) (K. Kamaraj, 15 சூலை 1903 - 2 அக்டோபர் 1975) இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆவார். இவர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு காமராசர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

நீதிக்கதை

 பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது 


விஜயபுரி என்ற நாட்டை விஜயவர்மன் என்ற மன்னன் ஆண்டு வந்தார். அவருடைய அரசவையில் மகிபாலன் என்ற அமைச்சர் இருந்தார். நகைச்சுவை உணர்வும், புத்தி கூர்மையும் நிறைந்திருந்த அவர் சமயத்திற்கு ஏற்றபடி பேசும் ஆற்றலும் பெற்றிருந்தார். 

ஆனால், அவர் தோற்றத்தில் மிகவும் குள்ளமாக இருந்தார். ஒரு சமயம் மன்னன் விஜயவர்மன் அவரை பக்கத்து நாட்டிற்கு தூதராக அனுப்பினார். 

அந்த நாட்டு அரசன் பிறர் மனம் புண்படும்படி பேசுவதில் விருப்பம் உடையவராக இருந்தார். 

தூதுவராக வந்த அமைச்சர் மகிபாலன் குள்ளமாக இருப்பதை  பார்த்த அவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. 

உடனே, அவர் அமைச்சரை பார்த்து, “தூதுவனாக அனுப்ப உன்னை விட சிறந்த ஆள் கிடைக்கவில்லையா? இவ்வளவு குள்ளமாக இருக்கும் உன்னை போய் தூதராக அனுப்பி இருக்கிறாரே, உங்கள் மன்னர்” என்று கேலியாக கேட்டார்.

இந்த பேச்சைக் கேட்டு அமைச்சர் மகிபாலனுக்கு கோபம் தலைக்கேறியது. தான் இருக்கும் சூழ்நிலையை அறிந்து கோபத்தை அடக்கி கொண்டார். உடனே அவர் அரசரைப் பார்த்து, “அரசே, எங்கள் நாட்டில் பெருமிதமான தோற்றம் உடையவர்கள் பல பேர் இருக்கிறார்கள்.

அவர்கள்    உருவத்தைப் பார்த்தால் அனைவரும் ஆச்சரியப்பட்டு போவார்கள். 

இதைக் கேட்ட அந்த அரசர் “அப்படிப்பட்டவர்கள் உங்கள் நாட்டில் இருந்தால் உன்னைப் போன்ற ஒரு குள்ளனை ஏன் தூதுவனாக இங்கு அனுப்பி வைத்தார்கள்” என்று கேட்டார்.

இதனால் அமைச்சர் பெரிதும் மனவேதனை அடைந்தார். உடனே அவர், “அரசே, எங்கள் நாட்டிற்கு ஒரு வழக்கம் உண்டு, அந்த வழக்கத்திற்கு ஏற்ப என்னை இங்கே தூதுவனாக அனுப்பி உள்ளார்கள்” என்றார். 

“உங்கள் நாட்டு வழக்கம்தான் என்ன?” என்று குத்தலாக கேட்டார் அரசன். உடனே அமைச்சர் பின்வருமாறு பதிலளித்தார், “அரசே, ஒவ்வொரு நாட்டின் இயல்புகளுக்கு ஏற்றபடியே தூதர்களை அனுப்புவது எங்கள் மன்னரின் வழக்கம். 

அறிவு உள்ள அரசர் ஆளும் நாட்டிற்கு அறிவுள்ள தூதர்களை அனுப்புவார். முட்டாளான அரசர் ஆளும் நாட்டிற்கு முட்டாளை அனுப்புவார். எங்கள் நாட்டிலேயே வடிகட்டிய பெரிய முட்டாள் நான்தான். அதனால் தான் என்னை இந்த நாட்டுக்கு தூதனாக அனுப்பியுள்ளார்”  என்றார்.

இதைக் கேட்டதும் அந்த அரசர் அவமானத்தால் தலை குனிந்தார். இனிமேல் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்று அவர் தன் மனதில் எண்ணிக் கொண்டார். அதன்படியே வாழ்விலும் நடந்தார். 

நீதி : பிறர் மனம் புண்படும்படி பேசக்கூடாது. அவ்வாறு பேசுபவர்கள் தாங்களே அவமானப்பட வேண்டி வரும். எனவே, எப்பொழுதும் பிறர் மகிழும்படியாகவே பேச வேண்டும்.

இன்றைய செய்திகள்

15.07.2024

∆ நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு - ஏராளமானோர் பங்கேற்பு.

∆ அரசு உதவிபெறும் தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் நாளை முதல் விரிவாக்கம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார்.

∆ தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

∆ மகாராஷ்டிராவில் சாலை, ரயில்வே உட்பட ரூ.29,400 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.

∆ அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு.

∆ பிரான்ஸில் நடந்த சர்வதேச சதுரங்கப் போட்டியில், ஈரோட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் வெண்கலப் பதக்கம் வென்றார்.

∆ கோபா அமெரிக்க கால்பந்து தொடர்: பெனால்டி ஷூட் அவுட்டில் கனடாவை வீழ்த்தி 3வது இடம் பிடித்த உருகுவே.

∆ விம்பிள்டன் டென்னிஸ்: 'சாம்பியன்' பட்டம் வென்றார் செக்குடியரசின் கிரெஜ்சிகோவா.

Today's Headlines

∆ Entrance Test for Apprenticeship under Nan Muthalvan Scheme – Large number of students took Part in it.

 ∆ Breakfast scheme in government- aided primary schools to be expanded from tomorrow: Chief Minister Stalin will inaugurate.

 ∆ Chennai Meteorological Center has informed that 5 districts including Nilgiris and Coimbatore in Tamil Nadu are likely to receive heavy rain for 3 days from today.

∆  Prime Minister Modi laid the foundation stone for Rs 29,400 crore projects including roads and railways in Maharashtra.

∆ Shooting at former US President Donald Trump.

 ∆ Grandmaster P. Inian of Erode won the bronze medal in the international chess tournament held in France.

 ∆ Copa America: Uruguay beat Canada in penalty shootout to finish 3rd.

 ∆ Wimbledon Tennis: Czech Republic's Krejcikova wins 'Champion' title
 Prepared by

Covai women ICT_போதிமரம்

1 comment: