Monday, November 12, 2018

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 13.11.18

திருக்குறள்


அதிகாரம்:இனியவை கூறல்

திருக்குறள்:96

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.

விளக்கம்:

பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடையச் சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய, அறம் வளர்ந்து பெருகும்.

பழமொழி

Pen is mightier than sword

வாள் முனையை விட பேனா முனை வலிமையானது

இரண்டொழுக்க பண்பாடு

* விலங்குகள் மற்றும் பிற உயிரினங்களை துன்புறுத்த மாட்டேன்.

* பாரதியாரின் கூற்றுப்படி எல்லா உயிரிகளிடத்திலும் அன்பு செலுத்துவேன்

 பொன்மொழி

எந்த அளவுக்கு உங்கள் அறிவை தொழிற்கல்வியோடு சேர்த்துப் பயன்படுத்துகிறீர்களோ அந்த அளவிற்கே முன்னேறுவீர்கள்.

    - இங்கர்சால்

பொது அறிவு

1. ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை எது?

 சென்னை புனித ஜார்ஜ் கோட்டை

2. குஜராத்தின் தற்போதைய முதலமைச்சர் யார்?

 விஜய் ரூபாணி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

சின்ன வெங்காயம்



1.மூல நோயால் அவதிப்படுவோர் உணவில் சின்ன வெங்காயத்தை அதிகமாக
சேர்ப்பது நல்லது.

2.பொடுகுத் தொல்லை, முடிகொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன 
வெங்காயம் நல்ல பலன் தரும்.

3. தேள் கொட்டின இடத்துல வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது.

English words and meaning

Bilingual. இருமொழி
Billet.      டிக்கட்
Baffle.    ஏமாற்று
Brag.      தற்பெருமை
Burial.    புதைத்தல்
அறிவியல் விந்தைகள்

* உலகிலேயே ஸ்ட்ராபெர்ரி பழத்தின் விதைகள் மற்றும் முந்திரி பழ விதைகள் மட்டுமே பழத்திற்கு வெளியில் காணப்படும்.
* சில வகை மூங்கில்கள் ஒரே நாளில் ஒரு மீட்டர் உயரம் வளரக் கூடியவை.
* கிரிக்கெட் மட்டைச் செய்ய பயன்படுத்தப்படும் வில்லோ மரத்தின் பட்டைகள் தான் முதன் முதலில் வலி நிவாரணியாக பயன் படுத்தப் பட்டது
* மனித கண்கள் பத்து லட்சம் வேறு பட்ட வண்ணங்களை அறிய முடியும்.

நீதிக்கதை

பான்யாவின் பயணம்!

பான்யா பறக்க ஆரம்பிச்சு ரொம்ப நேரமாச்சு. அதிகச் சோர்வு காரணமாக, உடம்பு தளர்ந்திருந்துச்சு. இறக்கைகள் பிய்ந்துவிடுமோனு பயமும் வந்துச்சு. 

எல்லாம் ஆன்யாவை நம்பி வந்ததன் பலன். ‘நகரத்துக்குக் குடிபெயர்ந்தே ஆகணும். அங்கேதான் நல்லா வாழமுடியும். சாப்பாட்டுக்குப் பஞ்சமே இருக்காது. வயித்தை நிரப்ப, விதவிதமான தின்பண்டங்கள் கிடைக்கும். நிறைய நண்பர்களின் பழக்கம் கிடைக்கும்’ என்றெல்லாம் சொல்லி, பான்யாவின் ஆசையைத் தூண்டிவிட்டது ஆன்யா.

யார் இந்த பான்யா, ஆன்யா?

ரெண்டுமே ஈக்கள். பொறந்ததிலிருந்தே நட்போடு பழகி, இணைபிரியாத நண்பர்களா இருக்காங்க. போன வாரம் ஒருநாள், திடீர்னு ஆன்யா காணாமப்போயிட்டா. மாட்டுத் தொழுவம், கடைவீதிக் குப்பை, கசாப்புக் கடை வாசல்ன்னு தேடிப் பார்த்துக் களைச்சுப் போச்சு பான்யா.

ஆனால், வெளியூர் போயிருந்த ஆன்யா, ஒரு வாரம் கழிச்சு உற்சாகமாகத் திரும்பி வந்துச்சு. சுத்திப் பார்த்துட்டு வந்த ஊர்கள் பற்றி கதை கதையா சொல்லிச்சு.

“வா, நம்ம நகரத்துக்குப் போகலாம். பால், பழங்கள், சக்கரை, பலகாரம் எல்லாம் கிடைக்குது. ஜனத்தொகை அதிகம் உள்ள ஊர்களில் சுகமா வாழலாம். பிரச்னையே இருக்காது” என்று தேன் பூசிய வார்த்தைகளால் நண்பன் பான்யாவை மயக்கிருச்சு. 

பேசிவெச்ச மாதிரியே, ரெண்டு ஈக்களும் வெளியூர் பயணத்துக்குக் கிளம்பினாங்க. வேர்த்து விறுவிறுக்கப் பறந்து பறந்து நகரத்துக்கு வந்து சேர்ந்தாங்க. குட்டியூண்டு உடம்பைத் தூக்கிட்டிப் பறக்கமுடியாத பான்யாவைப் பார்த்துச் சமாதானம் செஞ்சு பேசிச்சு ஆன்யா.

“இன்னும் கொஞ்ச தூரம்தான். பெரிய பஜாருக்குள்ளே நுழைஞ்சுடலாம். ம்ம்ம்.. சோர்ந்து போகாதே பான்யா”

“நிறுத்து, ஆசைகாட்டி ஆசைகாட்டியே பகல் முழுக்க அலைய விட்டுட்டே. நான் கொஞ்சம் ஓய்வு எடுக்கணும்”

கடுமையான கோபத்தில் இருந்தது பான்யா. என்னதான் செய்றது? ஆன்யா காட்டப்போற அதிசயங்களைப் பார்த்துருவோம் என்ற ஆசையும் விடலை. பசி வயிற்றைக் கிள்ளிச்சு.

“பொறுமையா இரு. பிரமாதமான விருந்து கிடைக்கும்’’ என்ற ஆன்யாவின் சமாதான வார்த்தையைக் கேட்டு ஆறுதல் அடைந்தது பான்யா.

ஈக்கள் இரண்டும் பஜாரை வந்தடைந்தன. பசும்பாலில் தயாரித்த நெய் வாசம் மூக்கைத் துளைக்க, இரண்டு ஈக்களும் நெய் விற்பனைக் கடைக்குள் நுழைந்தன. கடைக்காரர் நெய் பாத்திரத்தை மூடிவெச்சிருந்தார். வாடிக்கையாளர்கள் வரும்போது, மூடியைத் திறந்து கரண்டியால் நெய்யை எடுத்து ஊற்றிக்கொடுத்துவிட்டு மறுபடியும் மூடிவைத்தார். 

பான்யாவுக்குப் பெருத்த ஏமாற்றம். மூக்கு நிறைய வாசனை பிடித்ததுதான் மிச்சம். ஒரு துளி நெய்கூடச் சுவைக்கக் கிடைக்கவில்லை. எவ்வளவு நேரம்தான் நாக்கைச் சப்புக்கொட்டியபடி இருப்பது? “ச்சே” எனச் சலித்துக்கொண்டது.

“சரி, வா… அதோ தர்பூசணிக் கடை இருக்குது” என்றது ஆன்யா.

இரண்டு ஈக்களும் மலைபோலக் குவித்து வைக்கப்பட்டிருந்த தர்பூசணிக் கடைக்குள் நுழைந்தன. கடைக்காரர், ஒரே ஒரு பழத்தைப் பல கீற்றுகளாக வெட்டிவைத்திருந்தார். ஆனால், அவற்றை ஈக்கள் மொய்க்காதபடி வலைக்கூடையைக் கவிழ்த்திருந்தார்.

ஒரு சிறுவன் சாப்பிட்டுக் கீழே போட்ட சின்னத் துண்டில், எல்லா ஈக்களும் போட்டியிட்டு உட்கார்ந்தன. கூட்டத்துக்கு மத்தியில் நுழைய எவ்வளவோ முயற்சி செய்து பான்யா தோற்றுப்போச்சு. பசி மயக்கம்.

“நாம நெனச்சபடி ஒண்ணும் நடக்கல. நடக்கவும் நடக்காது. இதெல்லாம் வீண் ஆசை” என அலுத்துகிச்சு பான்யா.

“இப்படி யோசிசுட்டே இருந்தா பயன் இல்லை. ஒரு வாய் சாப்பிடலைன்னா செத்தா போயிருவோம். இப்படி ஓர் அனுபவமும் வாழ்க்கைக்குத் தேவைதான்” என்றது ஆன்யா.

கோடையின் கதகதப்பு குறையாத கடைத்தெருவின் மறுமுனைக்கு, ஈக்கள் இரண்டும் பறந்து கரும்புச்சாறு விற்கும் நடைவண்டியைச் அடைந்தன.

கரும்புச்சக்கை கொட்டிக்கிடந்த பிரம்புக்கூடையில், ஏராளமான ஈக்கள் உட்கார்ந்திருந்தன. ‘நீயா நானா?’ எனப் போட்டி போட்டு ஒன்றின்மேல் ஒன்று விழுந்து சண்டையிட்டபடி இருந்தன. அந்தக் காட்சியைக் கண்ட பான்யா திகைச்சுப்போய் நின்னது.

‘‘ஐயோ ஆன்யா! இதென்ன வாழ்க்கை? போட்டி, சண்டை, வம்பு, கூச்சல், குழப்பம்... இப்படி அநாகரிகமா, போட்டி நிறைந்த உலகத்தில சுகத்தை எதிர்பார்க்கிறது நல்லாயில்லே’’ என்று ஆதங்கத்தை எடுத்துச் சொன்னது பான்யா.

அதேநேரம் கரும்புச்சாறு பாத்திரத்துக்கு மேலே பறந்து வந்து உட்கார்ந்தது ஆன்யா. கடைக்காரர் தோளிலிருந்த துண்டை எடுத்து வீசினார். அவ்வளவுதான்... புயலில் சிக்கின மாதிரி பல அடிகள் தள்ளிப்போய்  விழுந்துச்சு. அதனிடம் அசைவில்லை.

ஆன்யா அருகில்போய் சில நொடிகள் கண்ணீர் விட்ட பான்யாவுக்கு அதுக்கு அப்புறம் அங்கிருக்கப் பிடிக்கல. பழைய இருப்பிடத்தை ஞாபகம்வெச்சுப் பறக்க ஆரம்பிச்சது. வழியில் ஒரு நாவல் மரத்தடியில் நசுங்கிக்கிடந்த பழத்தைச் சாப்பிட்டுப் பசியாறிச்சு.

மறுநாள் காலையில், ஒரு மாட்டுத் தொழுவத்தை வந்தடைந்துச்சு. ஒரு பாட்டி, பசுவுக்குப் புண்ணாக்கு வைத்துவிட்டு, கன்றுக்குட்டிக்குக் கையளவு வைக்கோல் வைத்தார். அவர் நகர்ந்துபோனதும், பசுவின் மடியில் பறந்துசென்று உட்கார்ந்துச்சு பான்யா. கன்றுக்குட்டி குடிச்சு மிச்சமாக ஒட்டியிருந்த ஒரு துளி பாலைக் குடிச்சதும் அதற்கு வயிறு நிரம்பியது.

“வாழ்க்கையில் நாம நிறைய எதிர்ப்புகளை உருவாக்கிக்கிறோம். அதுதான் ஏமாற்றத்தையும் மன உளைச்சலையும் கொடுக்குது. நமக்கான தேவையை இயற்கையிடமிருந்து அளவோடு எடுத்துக்கிட்டாலே நிம்மதியா சந்தோஷமா வாழலாம் எனப் புரிஞ்சது.

பசுவுக்கும் கன்றுக்கும் நன்றி சொல்லிட்டு உற்சாகமாகப் பறந்துச்சு பான்யா.     

இன்றைய செய்திகள்

13.11.18


* இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஜிஎஸ்எல்வி மாக்-3 ராக்கெட் திட்டமிட்டபடி நாளை மறுநாள் (நவ.14) மாலை 5.08 விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

* தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

* சென்னை மாநகராட்சி சார்பில் பராமரிக்கப்பட்டு வரும் கால்வாய்களில் வளரும் தாவரங்களை அகற்றவும், தூர் வாரவும் ரூ.12 கோடியில் இரு நவீன இயந்திரங்களை வாங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

* டெஸ்ட் வரலாற்றிலேயே 2 இரட்டைச் சதங்கள் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை வங்கதேசத்தின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம் நிகழ்த்தியுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்டில் இவர் 219 ரன்கள் குவித்தார்.

* மகளிர் டி20 உலகக் கோப்பை இரண்டாம் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

🌻 ISRO said that the launch of the GSLV MAC-3 rocket in India will be launched tomorrow (Nov. 14) on the evening of 5.08 pm.

🌻The Chennai High Court has asked why students should not be trained in English  language speaking training for students  in government schools in Tamil Nadu.

🌻 The corporation is taking action to purchase two modern machines at Rs.12 crores for removal of plants in the well and maintain the canals in Chennai Corporation.

🌻Bangladesh's wicketkeeper Mashpikur Rahim has performed the world record of one wicket keeper for 2 double centuries in Test history. He scored 219 runs in the 2nd Test against Zimbabwe.

🌻In the Women's T20 World Cup, Indian team won by 7 wickets against Pakistan.🎖

Prepared by
Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment