Tuesday, August 27, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.08.2024

 

ஈஸ்ட் - Yeast

 




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:621

இடுக்கண் வருங்கால் நகுக; அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்.

பொருள்: துன்பம் வரும்போது (அதற்காக்க் கலங்காமல்) நகுதல் வேண்டும்.அத் துன்பத்தை நெருங்கி எதிர்த்து வெல்ல வல்லது அதைப்போன்றது வேறு இல்லை.

பழமொழி :

Many hands make work light.

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

இரண்டொழுக்க பண்புகள் :  

*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். 

 * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

வெற்றி என்பது மகிழ்ச்சிக்கான திறவுகோல் அல்ல. மகிழ்ச்சியே வெற்றிக்கான திறவுகோல். நீங்கள் செய்வதை நேசித்தால், நீங்கள் வெற்றியடைவீர்கள்." - ஆல்பர்ட் ஸ்விட்சர்

பொது அறிவு : 

1. ஈஸ்ட் என்பது ஒரு______ 

விடை: பூஞ்சை 

 2. தேனீக்கள் வளர்க்கும் முறை______ 

விடை : ஏபிகல்சர்

English words & meanings :

 amiable-நட்பு,

  affable-நட்புணர்வுள்ள

வேளாண்மையும் வாழ்வும் : 

முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.

நீதிக்கதை

 ஆணவத்தின் முடிவு.


ஒரு காலத்தில் வடக்கிலிருந்து வீசும் வாடைக் காற்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த வருடத்துக் குளிர் காலம் நீண்டதாகவும் அதிக குளிருடனும் இருந்ததால் வாடைக்காற்று மிக கர்வம் அடைந்தது. ‘உலகம் முழுவதையும் என்னால் கடும் குளிரில் உறைய வைக்க முடிந்தது. பூமியிலேயே மிகவும் வலிமை வாய்ந்த சக்தியாக நான் விளங்குகிறேன். என்னை விட வலிமையானவர் யாரும் இல்லை, என்று காற்று, அதிகமாக பெருமைப்பட்டுக் கொண்டது.


அதிக நேரமாக இதனுடைய பேச்சை கேட்ட பிறகு சூரியனுக்கு அலுத்துவிட்டது. மேகங்களுக்குப் பின்னால் இருந்து எட்டிப் பார்த்த சூரியன், வாடைக்காற்றை கூப்பிட்டது. “வலிமையும் பலமும் பொருந்திய இயற்கை சக்தியான நீ இவ்வாறு பெருமைப்பட்டுக் கொள்வது நல்லதன்று. நம் ஒவ்வொருவருக்கும் செய்ய வேண்டிய ஒவ்வொரு வேலை உண்டு,” என்று சூரியன் கூறியது.


வாடைக்காற்று மிக மிக அதிகமாக தன் வலிமையை நினைத்து கர்வப்பட்டு,

“என்னளவு பலம் உனக்கு இல்லாததால், நீ இவ்வாறு என்னிடம் சொல்கிறாய். இந்த பூமியில் எதை வேண்டுமானாலும் சாதிக்க என்னால் முடியும்,” என்று மிக அலட்சியமாக பதில் கூறியது வாடைக்காற்று.


இதை கேட்டதும் சூரியனுக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது


” உனக்கு ரொம்ப வலிமை இருப்பதாகவும் இந்த பூமியில் உன்னால் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றும் நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய். ஆனால், உன்னால் சிலவற்றை தான் செய்ய முடியும்,” என்று சூரியன் சொன்னது.


இதை கேட்டு சிரித்த காற்று, “என்னால் செய்ய முடியாதது என்ற ஒரு விஷயத்தை நீ கூறு, பார்க்கலாம்,” என்று சவால்விட்டது.


சூரியன் கீழே குனிந்து பார்த்தது. பூமியில் ஒரு மனிதன் சாலையில் போய்க்கொண்டிருந்தான். மிகவும் குளிராக இருந்ததால் அவன் தன்  மேலங்கியை கழட்டி தன்னை சுற்றி இறுக்கி போர்திக் கொண்டான்.


சூரியனுக்கு ஓர் எண்ணம் உதித்தது, வாடைக்காற்றிடம் சொல்லிற்று, “கீழே சாலையில் நடந்து செல்லும் அந்த மனிதனைப் பார். அங்கு நீ மிகவும்  குளிர்ச்சியாக செய்திருப்பதால் அவன் தன்னுடைய மேலங்கியை இழுத்துப் போர்த்திக் கொண்டிருக்கிறான். உன்னுடைய வலிமையை நீ உபயோகி; மேலங்கியை அவன் எடுத்து விட்டால் நீ தான் மிகவும் வலிமையானவன் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்றது.


இது மிகவும் எளிமையான பணி என்று வாடைக்காற்று எண்ணியதால் சவாலை ஏற்றுக் கொண்டது. காற்று வேகமாக வீசிற்று. சாலையில் அந்த மனிதன் இருந்த இடத்தில் இன்னும் அதிகவேகமாக வீசிற்று. மேலங்கியை அவன் கழற்றவில்லை.


 குளிர் தாங்காமல் அந்த மனிதன் தன் மேலங்கியை இன்னும் இறுக்கமாக பிடித்துக் கொண்டான். வாடைக் காற்றால் சவாலில் வெற்றி பெற முடியவில்லை. சூரியனை முயற்சி செய்யுமாறு காற்று கேட்டுக் கொண்டது.


சூரியன் மிகவும் பிரகாசமாக வெளிவந்தது, திடீரென்று வெப்பமாக இருப்பதை உணர்ந்த அந்த மனிதன், “என்ன வேடிக்கை! சற்று முன் கடுங்குளிராக இருந்தது; இப்போது வெப்பமாக இருக்கிறதே,” என்று தனக்குள் சொல்லிக் கொண்டான். சூரியன் மேலும் வெப்பத்தை அதிகரித்தது. 

சகிக்க முடியாத வெப்பத்தால் தன் மேலங்கியை கழற்றினான்; 


இவற்றையெல்லாம் பார்த்த காற்று  தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. அதன் பிறகு  வாடைக்காற்று கர்வத்தை விட்டொழித்து,தன்னுடைய கடமையை தவறாமல் செய்து வந்தது.


 நீதி : தற்பெருமை அவமானத்தை ஏற்படுத்தும்.

இன்றைய செய்திகள்

28.08.2024

* கூட்டுறவு சங்கங்களின் சேவைகளை அறிய 'கூட்டுறவு’ என்ற செயலி சேவையை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்.

* இளைய தலைமுறையினரிடம் நடக்கும் பழக்கம் குறைந்து வருவதால், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘விறு விறு நடையால் ஏற்படும் 20 நன்மைகள்’ குறித்தசெயல் திட்டத்தை தமிழக பொது சுகாதாரத்துறை தொடங்கியுள்ளது.

* பொதுமக்களுக்கு பெரும் சுமையாகும் சுங்க கட்டணத்தை உயர்த்தக் கூடாது: அரசியல் தலைவர்கள், வணிகர் சங்கம் மத்திய அரசுக்கு வலியுறுத்தல்.

* ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யுபிஎஸ்) மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்புகள் வலியுறுத்திய நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக இத்திட்டத்தை ஏற்பதாக மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.

* விடியவிடிய தாக்குதல் நடத்திய ரஷ்யா: ஏவுகணை, ட்ரோன் தாக்குதலால் நிலைகுலைந்த உக்ரைன்.

* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் லோரென்சோ முசெட்டியும், பெண்கள் ஒற்றையர் பிரிவில்  சபலென்காவும்
அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்.

* மகளிர் டி20 உலகக்கோப்பை: ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு.

Today's Headlines

* Minister K.R. Periyakarupan inaugurates 'Cooperative' mobile app to know the services of cooperative societies.

* Tamilnadu public health department launches a project to raise awareness about the 20  benefits of regular walking among the younger generation.

* Central government was urged not to increase customs duty, which is a burden on the general public insisted by political leaders and trade associations.

*  Maharashtra government has announced that it will be the first state in the country to implement the Unified Pension Scheme (UPS) as the Unions of Central Government Employees have urged the state governments to implement the scheme.

 * Russia launches massive attack: Ukraine has been destabilized by missile and drone strikes."

 * US Open Tennis: Lorenzo Musetti and Sabalenka advance to the next round in men's and women's singles respectively.

*  Women's T20 World Cup: India   announced the team headed by Harmanpreet Kaur.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, August 26, 2024

பள்ளி காலை வழிபட்டு செயல்பாடுகள் - 27.08.2024

  

இரத்த சிவப்பணுக்கள்




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

அதிகாரம்: காலம் அறிதல்

குறள் எண்490

கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து.

பொருள்: பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல அமைதியா இருக்க வேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

பழமொழி :

Better to bend the neck than bruise the forehead.

தாழ்ந்தது நின்றால் வாழ்ந்து நிற்பாய்.

இரண்டொழுக்க பண்புகள் :  

*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். 

 * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

கல்வி என்பது ஒரு செலவு அல்ல. அது ஒரு முதலீடு என்று நாங்கள் நம்புகிறோம். –லிண்டன் பெய்ன்ஸ் ஜான்சன்

பொது அறிவு : 

1. சிவப்பு இரத்தச் செல்களின் ஆயுட் காலம்: 

விடை:100 - 120 நாட்கள்.

 2.மாமரத்தின் சிற்றினப் பெயரைக் குறிப்பிடுக. 

விடை: இண்டிகா

English words & meanings :

 renowned-புகழ்பெற்ற,

   eminent-சிறந்த

வேளாண்மையும் வாழ்வும் : 

ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். ஆட்டுக் கல்லில் தான் முன்னால் மாவு ஆட்டி வந்தார்கள்

நீதிக்கதை

 குதிரையும் கழுதையும் 


முன்னொரு காலத்தில் ஒரு கிராமத்தில், பண்ணையின் சொந்தக்காரன் ஒருவன் இருந்தான். அவனுக்கு குதிரை ஒன்றும் கழுதை ஒன்றும் இருந்தன. குதிரைக்கு எப்பவுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். ஆனால் கழுதைக்கு அதுபோல் கவனிப்பும், உணவும் கிடைக்கவில்லை. எனவே கழுதைக்கு எப்போதும் ஒரு மனக்கவலை இருந்தது.


“நான் நன்கு வேலை செய்தும் என்னை சரியாக கவனிக்கவில்லை, ஆனால் வேலையே செய்யாமல் இருக்கும் குதிரையை மிகவும் நன்றாக கவனிக்கிறார்கள்” என்று கழுதை எண்ணியது. நாட்கள் கடந்து சென்றன, ஒரு நாள் நாட்டில் யுத்தம் ஏற்பட்டது. பண்ணைக்காரன் தன் குதிரை மேல் ஏறி யுத்தத்திற்கு சென்றான்.


பல நாட்களுக்குப் பின் குதிரையையும், எஜமானனும் வீட்டிற்கு திரும்பினர். வீட்டிற்கு வரும்போது குதிரையின் காலில் பலமான அடிபட்டிருந்தது.  காயத்தினால் உடல் புண்ணாகி இருந்த குதிரையைப் பார்க்க கழுதைக்கு மிகவும் பாவமாக இருந்தது.


இதுவரை குதிரைக்கு கிடைத்த உபசரிப்பு பற்றி தவறாக நினைத்துக் கொண்டிருந்தது கழுதைக்கு புரிந்தது. கழுதை குதிரையிடம்  சென்று, “நண்பா, இந்நாள்வரை உனக்கு கிடைத்த உபசரிப்பை  நினைத்து நான் பொறாமை பட்டுள்ளேன். உன்னை நான் தவறாக எண்ணி உள்ளேன், தயவு செய்து என்னை மன்னித்துவிடு”  என்று கூறியது.


அன்று முதல் கழுதை குதிரையிடம் நட்பாக பழகியது. இருவரும் நல்ல நண்பர்களாக மாறினர். அதுமட்டுமில்லாமல் கழுதை தன்னை  பண்ணைக்காரன் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்று கழுதை வருத்தப் படவுமில்லை.


நீதி : நமக்கு கிடைப்பதில் திருப்தி அடைய வேண்டும்.

இன்றைய செய்திகள்

27.08.2024

- வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த எவருக்கும் குரங்கு அம்மை அறிகுறிகள் இல்லை: பொது சுகாதார துறை இயக்குநர் தகவல்.

- தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்கா பயணம்.

- இந்திய ரயில் பாதைகள் 95% மின்மயமாக்கப்பட்டுள்ளதன் மூலம் உலகின் மிகப்பெரிய பசுமை ரயில்வே நெட்வொர்க் ஆக உருவெடுத்துள்ளது.

- மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, தெற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

- இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே முற்றும் மோதல்: பதற்றத்தை தடுக்க ஐ.நா வலியுறுத்தல்.

- ஜூனியர் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்; இந்தியாவின் தன்வி பாத்ரி 'சாம்பியன்'.

- அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது.

- 2வது டி20; தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி.

Today's Headlines

- None of those who came to Tamil Nadu from abroad have symptoms of monkeypox: Public Health Department Director informs.

-   Chief Minister M.K.Stalin travels to the US today to motivate investors to invest in Tamil Nadu.

-  Indian railways become the world's largest green railway network as  95% of trains are run by electricity.

- Heavy rain warning issued for Madhya Pradesh, Rajasthan, Gujarat, Maharashtra, and South Rajasthan: by Indian Meteorological Department.

- Israel-Hizbullah conflict escalates: UN urges to stop the war.

- Junior Asian Badminton Championship; India's Dhanvi Bhatri won the championship.  

-  US Open tennis tournament begins in New York City yesterday.        

- West Indies achieve a thrilling win, defeating South Africa in the 2nd T20.
 Prepared by

Covai women ICT_போதிமரம்