Monday, March 23, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.03.2026

உலக காசநோய் தினம்


     



 






திருக்குறள்: 

குறள் 238: 

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் 
எச்சம் பெறாஅ விடின்.          

விளக்க உரை: 

தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

பழமொழி :

Even a trash becomes worthy in a dexterous  hand . 

வல்லவர்  கை பட்டால் உதவா    குப்பையும்  உயர் மதிப்படையும் 

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி : 

ஒரு முள் குத்திய அனுபவம், காடளவு எச்சரிக்கைக்குச் சமம்.

பொது அறிவு : 

01.சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice) எங்கு அமைந்துள்ளது?

 நெதர்லாந்து -ஹேக் நகர்  (Netherland -Hague) 

02. தமிழின் முதல் காப்பியம் எது?

 சிலப்பதிகாரம்-Silappatikaram

English words :

Campaign – Activities to win votes

Manifesto – Promises made by a party

தமிழ் இலக்கணம்: 

காற்றுக்கு பொருளோடு வைக்கப் பட்டுள்ள பெயர்கள் குறித்து இன்று பார்ப்போம்

தெற்கில் இருந்து வீசும் இதமான காற்று - தென்றல்

வடக்கிலிருந்து வீசும் குளிர்ந்த காற்று - வாடை

கிழக்கிலிருந்து வீசும் காற்று - கொண்டல் 

மேற்கிலிருந்து வீசும் காற்று - கச்சான்/மேலைக் காற்று 

      தொடரும் நாளை

அறிவியல் களஞ்சியம் :

தட்டான் பூச்சிகளுக்கு (Grasshoppers) அவற்றின் வயிற்றுப் பகுதியில் காதுகள் உள்ளன.

மார்ச் 24

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day)

உலகக் காசநோய் நாள் (World Tuberculosis Day), மக்களிடையே காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 24 அன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. 2012 ஆம் ஆண்டில், 8.6 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர், 1.3 மில்லியன் மக்கள் இந்நோயால் இறந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் குறைந்த, அல்லது நடுத்தர வருமானங் கொண்ட நாடுகளைச் சேர்ந்தோர் ஆவர்

நீதிக்கதை

 அழுக்கு சட்டை

புத்தக மூட்டையுடன் பள்ளிக்குக் கிளம்பிய அப்பு அம்மாவுக்கு டாட்டா சொல்லிக் கொண்டு புறப்பட்டான். “ஏண்டா இன்னைக்கு குளிச்சியா” என்றாள் அப்புவின் அம்மா.

“நேரமாச்சும்மா, நாளைக்கு குளிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஓடினான். அப்பு ஐந்தாவது படித்துக் கொண்டிருந்தான். வகுப்பில் அவன்தான் முதல் மாணவன். அப்புவின் அம்மாவிற்குப் பெருமையாக இருந்தது.

அடுத்த நாள் வகுப்பிற்குள் நுழைந்ததும் ஆசிரியர் அப்புவிடம்தான் வந்தார். “ஏன் அழுக்கு சட்டையை போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். துவைத்துப் போடக்கூடாதா?” என்று ரகசியமாக அவனிடம் கேட்டார்.

“மறந்திட்டேன் சார்” சமாதானம் சொன்னான் அப்பு. படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கிய அப்பு ஏனோ தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் அக்கறை காட்டவில்லை. பல நாட்கள் அப்பு பல் விளக்காமலேகூட பள்ளிக்குப் போயிருக்கிறான்.

அப்போது பையன்கள் இவனிடம் கேட்டால், “யானை பல் விளக்குகிறதா” என்று கிண்டலாகப் பதில் சொல்வான். அப்புவின் அம்மாவும் வகுப்பு ஆசிரியரும் பலமுறை கூறியும் அவன் தன்னை சுத்தமாக வைத்துக் கொள்வதில் கவனம் செலுத்தவே இல்லை.

அவன் கவனம் முழுவதும் படிப்பிலேயே இருந்தது. ஆனால் பையன்கள் இவனை “அழுக்குமாமா” என்று அழைத்தனர். அரையாண்டுத் தேர்வு வந்தது. அப்பு விழுந்து விழுந்து படித்தான். முதல் மார்க்கை வேறு யாரும் தட்டி போய்விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

“டேய் குளிச்சிட்டுப் போய் படிடா” இது அப்புவின் அம்மா. “குளிக்கிற நேரத்துல ஒரு பாடம் படிக்கலாம்மா” என்பான் அப்பு. பரிட்சைக்கு இன்னும் இரண்டு நாள் இருந்தது. அப்போது அப்புவுக்கு திடீரென்று பல்வலி வந்தது. வலியோடு பள்ளிக்கூடம் சென்றான்.

மாலை வீட்டிற்கு வருவதற்குள் அவன் முகத்தில் தாடைப்பகுதி பெரியதாக வீங்கிவிட்டது. விண் விண் என்று வலித்தது. உடம்பு அனலாக கொதித்தது. அப்புவின் அம்மாவும் அப்பாவும் கை வைத்தியமாக ஏதோ செய்தார்கள். எதுவும் சரிப்படவில்லை.

விடிந்தால் அரையாண்டுத் தேர்வு. அப்பு புலம்பிக் கொண்டே இருந்தான். அவனால் வலியைத் தாங்க முடியவில்லை. ஆசிரியர் அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினார்.

அடுத்த நாள் மதுரையில் அப்புவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. “பல்வலிக்கு காரணமாக இருந்த சொத்தைப் பல்லை உடனடியாக எடுக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்து” என்றார் டாக்டர்.

அப்பு அரையாண்டுத் தேர்வுக்கு போகமுடியவில்லையே என்று அழுது கொண்டிருந்தான். “தினந்தோறும் பற்களை சுத்தம் செய்தால் இப்படிப்பட்ட பிரச்சினையெல்லாம் வரவே வராது” என்றார் டாக்டர்.

அப்பு ஒருவாரம் மருத்துவமனையில் இருந்தான். அரையாண்டுத் தேர்வு முடிந்து அன்றுதான் பள்ளிக்கூடம் திறந்தது. அன்று வகுப்பில் ரேங்க் கார்டு கொடுக்கப்பட்டது. “முதல் மார்க் ரங்கராஜன்” என்று ஆசிரியர் பெயரைப் படித்தபோது அப்பு தேம்பி அழுதான்.

ஆசிரியர் அவனை சமாதானப்படுத்தினார். “சுவற்றை வைத்துதான் சித்திரம் எழுத வேண்டும் நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்றார். அப்பு மௌனமாக இருந்தான்.

அடுத்தநாள் அவன் பள்ளிக்கு “பளிச்” என்று வந்தான்.

“அழுக்குமாமா இப்போ உஜாலாவுக்கு மாறிட்டாண்டா” என்று ஒருவன் சொல்ல பையன்கள் “கொல்” லென்று சிரித்தனர்.

அப்புவுக்கும் சிரிப்பு வந்தது.

இன்றைய செய்திகள்

24.03.2026

⭐ ஈரானில் உள்ள பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அவர்களுக்கு இந்தியா தொடர்ந்து உதவிகளை அனுப்பி வருகிறது.  "இந்தியாவின் கருணையையும் மனிதநேயத்தையும் ஒருபோதும் மறக்க மாட்டோம் என  ஈரான் கூறியுள்ளது.

⭐அமெரிக்க - ஈரான் போரில் ஈரான் மிக பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளது.
இந்த போரால் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர்.

⭐வளைகுடா நாடுகள் குடிநீருக்கு 90% கடல் நீரை தான் நம்பியிருக்கின்றன. கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தாக்கப்பட்டால் பல நாடுகளில் குடிநீர் பஞ்சம் ஏற்படும்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀நியூசிலாந்துக்கு எதிரான 4வது 'டி-20' போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 19 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

🏀 இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள்
மோதும் கிரிக்கெட் டெஸ்ட் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ)அறிவித்துள்ளது.

Today's Headlines

⭐ In a situation where several lakh people in Iran are affected, India has been continuously sending aid. Iran has stated, We will never forget India’s compassion and humanity.

⭐ In the US–Iran war, Iran has suffered massive damage. More than 5,000 people have lost their lives due to this conflict.

⭐ Gulf countries depend on seawater for about 90% of their drinking water. If desalination plants are attacked, many countries could face severe drinking water shortages.

 *SPORTS NEWS* 

🏀 In the 4th T 20 match against New Zealand, South Africa won by 19 runs.

🏀 Cricket Australia (C A) has announced that the Test series between India and Australia will begin in January next year.

Covai women ICT_போதிமரம்

Sunday, March 22, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.03.2026


   



 






திருக்குறள்: 

குறள் 236: 

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று.      
விளக்க உரை: 

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

பழமொழி :

Beat after beat will make even a stone move. 

அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்

இரண்டொழுக்க பண்புகள் :.

1.போட்டி நிறைந்த உலகில் போராடத் தேவையான வல்லமையை வளர்த்துக் கொள்வேன்.

2.என் திறமைகளை வளர்த்துக் கொண்டு சாதனைகள் புரிவேன்.

பொன்மொழி : 

ஒவ்வொரு தோல்வியும் ஒரு அனுபவம். ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு எச்சரிக்கை - கவிஞர் கண்ணதாசன்

பொது அறிவு : 

 01.அமெரிக்க அதிபர் தேர்தல் எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்?

            நான்கு ஆண்டுகள்

02.இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த மற்றும் பழமையான இலக்கிய விருது எது?

ஞானபீட விருது -Jnanpith Award

English words :

Ballot – The vote itself (paper or electronic)

Polling – The act of voting

தமிழ் இலக்கணம்: 

இன்று இறந்த கால இடைநிலைகள் என்றால் என்ன என்று பார்ப்போம்

தமிழ் இலக்கணத்தில், ஒரு செயல் ஏற்கனவே முடிந்துவிட்டதைக் காட்டும் இடைநிலைகள் இறந்தகால இடைநிலைகள் (Past Tense Markers) எனப்படும்.

இவை த், ட், ற், இன் ஆகிய நான்கும் ஆகும். இவை பகுபதத்தில் பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் உணர்த்துகின்றன. 

முக்கியமான இறந்தகால இடைநிலைகள்:

த்: படித்தான் (படி+த்+த்+ஆன்)

ட்: உண்டான் (உண்+ட்+ஆன்)

ற்: பெற்றான்

இன்: ஓடினான் (ஓடி+ன்+ஆன்)

இன்னும் சில எ. கா 

சென்றான்: செல் + ற் + ஆன் (ற் - இறந்தகால இடைநிலை)

கற்றாள்: கல் + ற் + ஆள் (ற் - இறந்தகால இடைநிலை)

பார்த்தான்: பார் + த் + ஆன் (த் - இறந்தகால இடைநிலை)

அறிவியல் களஞ்சியம் :

பிறக்கும்போது குழந்தைகளின் எலும்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும், வளர வளர அவை இணைந்து பெரியவர்களில் 206 எலும்புகளாக மாறுகின்றன.

மார்ச் 23

உலக வானிலை நாள் (World Meteorological Day);



உலக வானிலை நாள் (World Meteorological Day); இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.

பகத் சிங்,  சிவராம் ஹரி ராஜகுரு, சுக்தேவ் தபார், 




இந்திய-பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில், பகத்சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவின் சிலைகள்


பகத் சிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907 – மார்ச் 23, 1931) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.

நீதிக்கதை

 ஏமாந்த சிறுத்தை

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.

அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.

அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.

சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.

உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.

முக்கியமான நேரத்தில் முக்கியமான முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

23.03.2026

⭐இஸ்ரேல் மற்றும் அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகெங்கிலும் உள்ள பொது இடங்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அறிவித்துள்ளது.

⭐குஜராத்தில் யோகா மையம் நடத்தி, கள்ள நோட்டுகளை அச்சிட்ட ஆறு பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

⭐பாகிஸ்தானில் நீர் பஞ்சம் ஏற்படும் ஆபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்தி இந்தியா தண்ணீரைத் தர வேண்டும் என பாகிஸ்தான் கெஞ்சுகிறது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி நிர்வாகம் தனது முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்களை ஒன்றிணைக்கும் வகையில் 'ரோர் 26' என்ற பெயரில் பிரமாண்ட ரீயூனியன் நிகழ்ச்சியை நேற்று சென்னையில் நடத்தியது.

🏀இந்திய அணி, அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளது.

Today's Headlines 

⭐ In response to attacks by Israeli and American forces, Iran has announced that it will carry out attacks targeting public places around the world.

⭐ In Gujarat, a gang of six people who were running a yoga center and printing counterfeit currency has been arrested.

⭐ Pakistan is facing a potential water crisis. Meanwhile, it has urged India to release water by implementing the Indus Water Treaty.

 *SPORTS NEWS* 

🏀 The Chennai Super Kings (CSK) management organized a grand reunion event in Chennai yesterday called Roar 26,bringing together former and current players.

🏀 The Indian team has decided to tour Ireland and play two T20 matches.

Covai women ICT_போதிமரம்

Thursday, March 19, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 20.03.2026

உலக சிட்டுக்குருவிகள் நாள்




 






திருக்குறள்: 

குறள் 573: 

பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் 
கண்ணோட்டம் இல்லாத கண். 

விளக்க உரை: 

பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்.

பழமொழி :

Everything has its own worth. 

அதற்கு அதற்குரிய மதிப்பு உண்டு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

வன்முறை என்பது மோசமானது. ஆனால், அடிமைத்தனம் வன்முறையைக் காட்டிலும் மோசமானது - சுபாஷ் சந்திர போஸ்

பொது அறிவு : 

1. உலக அளவில் புளி அதிகம் உற்பத்தி செய்யும் நாடு எது?

இந்தியா

2. அரிசி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும்  நாடு எது?

தாய்லாந்து

English words :

Candidate – A person who contests in an election

Constituency – Area where people vote for a candidate

தமிழ் இலக்கணம்: 

த்தனை, எத்துணை இவைகளின் வேறுபாடு காண்போம்.

 எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்

எ. கா.

 1. எத்தனை நோட்டுகள் வேண்டும்?

2. எத்தனை பழங்கள் விற்பனை ஆயின?

 எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்

எ. கா. 1. எத்துணை பெரிய மலை

2. எத்துணை சிறிய பூச்சி 

   3. எத்துணை ஆண்டு பழமையானது

4. எத்துணை மாதம் ஆகும்?

அறிவியல் களஞ்சியம் :

மனித வயிற்று அமிலம் ரேஸர் பிளேடுகளைக் கரைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது.

மார்ச் 20

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD)

உலக சிட்டுக்குருவிகள் நாள் (World House Sparrow Day - WHSD), ஆண்டுதோறும் மார்ச் 20ஆம் நாள் அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் குறைந்து வருவதன் காரணமாகவும், நாள்தோறும் தமது வாழ்வுக்காக அவை எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி அதன் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் 2010ஆம் ஆண்டிலிருந்து உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூரப்படுகிறது.

நீதிக்கதை

 யானையும் தேனீயும்


ஒரு காட்டில் ஒரு தேனீ வசித்து வந்தது. அந்தத் தேனீக்கு தான் மட்டும் தான் இந்த காட்டில் மிகவும் அழகானவன் என்ற கர்வம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஒரு நாள் அந்தக் காட்டில் தேனீ பறந்து சென்று கொண்டிருக்கும் பொழுது ஒரு யானை வந்து கொண்டு இருந்தது.

அப்பொழுது அந்த தேனீ யானையின் காதின் மீது அமர்ந்து யானையை நலம் விசாரித்துக் கொண்டு யானையே நீ இவ்வளவு குண்டாக இருக்கிறாய் , என்னைப்பார் நான் எவ்வளவு மெலிதாக அழகாக இருக்கிறேன் என்னுடைய இந்த இறக்கைகள் என்னுடைய உடம்பிற்கு அழகினை கொடுக்கிறது என்று கூறிப் பெருமைப்பட்டுக் கொண்டது.

அந்த நேரத்தில் தேனீ யானையிடம் கூறியது, ஆனால் உனக்கும் எனக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் உனக்கு நீண்ட தும்பிக்கையை உள்ளது. எனக்கு நீண்ட வாய் உள்ளது .ஆனால் என் வாயினால் நான் பூவில் உள்ள தேனை உறிஞ்சுவேன். உன்னால் அது முடியுமா என்று கேட்டு கேலி செய்தது.

அந்த நேரத்தில் ஒரு பலத்த காற்று வீசியது. அந்தக் காற்றின் வேகத்தை யானை தாங்கிக் கொண்டது. ஆனால் தேனீயால் அந்த காற்றினை தாங்க முடியவில்லை. அந்த காற்றினால் அடித்து செல்லப்பட்ட ”தேனீ ஐயோ என்னை யாராவது காப்பாற்றுங்கள், என்னை யாராவது காப்பாற்றுங்கள்” என்று கத்திக்கொண்டே சென்றது.

அச்சமயம் யானை தேனீயை காப்பாற்றலாம் என்று பார்க்கும்பொழுது தேனீ கண்ணுக்கெட்டாத தூரம் சென்றுவிட்டது. யானை அதன் கொழுத்த உடலைக் கொண்டு அங்கிருந்து சிறிது வருத்தத்துடன் நகர்ந்து சென்றது.

கருத்து: கர்வம் கூடாது

இன்றைய செய்திகள்

20.03.2026

⭐உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வந்தாலும், இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் திட்டம் ஏதுமில்லை என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்து உள்ளது.

⭐மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள 15 அமெரிக்க நிறுவனங்கள், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஈரானின் பாதுகாப்புப் படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது.

⭐ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக சுமார் 6,00,000 டாலர் மதிப்புள்ள அத்தியாவசிய மருந்துகள் துபாய் துறைமுகத்தில் சிக்கியுள்ளன. இதனால் சூடானில் சுமார் 4,00,000 நோயாளிகள் மாற்று ஏற்பாடுகள் ஏதுமின்றி தவித்து வருகின்றனர்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐ.பி.எல். 2026 கிரிக்கெட் திருவிழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது

Today's Headlines

⭐ Even though crude oil prices are rising in the global market, India’s Ministry of Petroleum has announced that there is currently no plan to increase petrol and diesel prices in the country.

⭐ Iran’s security force (IRGC) has warned 15 American companies operating in Middle Eastern countries to immediately evacuate their employees.

⭐ Due to the Iran–Israel conflict, essential medicines worth about 600,000 dollars are stuck at the Dubai port. As a result, around 400,000 patients in Sudan are suffering without alternative arrangements.

*SPORTS NEWS*

🏀 The IPL 2026 cricket festival is set to begin on the 28th. Chennai Super Kings will face the defending champions, Royal Challengers Bangalore, in the opening match.

Covai women ICT_போதிமரம்

Tuesday, March 17, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.03.2026

ரூடோல்ப் டீசல்




 






திருக்குறள்: 

அதிகாரம் 58 / CHAPTER 58 

கண்ணோட்டம் 

குறள் 571: 

கண்ணோட்டம் என்னுங் கழிபெருங் காரிகை 
உண்மையான் உண்டிவ் வுலகு. 

விளக்க உரை: 

கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.

பழமொழி :

When fortune smiles embrace her. 

அதிர்ஷ்டம் கதவை தட்டும் போது அனைத்துக் கொள்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.

2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.

பொன்மொழி : 

தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நமது திறமையும் நேர்மையும் வெளிப்படும் பொழுது எதிரியும் நம்மை மதிக்க தொடங்குவான் - டாக்டர் அம்பேத்கர்

பொது அறிவு : 

01.இந்திய காடுகளின் ராஜா என்று அழைக்கப்படும் மரம் எது?

தேக்கு மரம் -Teakwood

02.இந்தியாவில் முந்திரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?

மகாராஷ்டிரா -Maharastra

English words :

opportunity -

a chance to do something that you would like to do, செய்ய விரும்பும் ஒன்றைச் செய்வதற்கான வாய்ப்பு

opponent -a person who disagrees with somebody's actions, எதிராளி

தமிழ் இலக்கணம்: 

அன்று என்பது ஒருமைக்கும் அல்ல என்பது பன்மைக்கும் உரியன.

எ. கா. 1. இது பழம் அன்று

இவை பழங்கள் அல்ல.

2. இது காகம் அன்று. 

        இவை காகங்கள் அல்ல

அறிவியல் களஞ்சியம் :

தேன் ஒருபோதும் கெட்டுப்போகாது; 3,000 ஆண்டுகள் பழமையான தேன் கூட உண்ணக்கூடிய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

மார்ச் 18

ரூடோல்ப் டீசல் அவர்களின் பிறந்த நாள்

ரூடோல்ப் கிறிஸ்டியன் கார்ல் டீசல் (பி. மார்ச் 18, 1858 - செப்டம்பர் 29, 1913) ஜெர்மனியைச் சேர்ந்த பொறியியலாளரும் புகழ் பெற்ற டீசல் உந்து பொறியைக் கண்டுபிடித்த கண்டுபிடிப்பாளரும் ஆவார். ரூடோல்ப் டீசல் உந்து பொறி கண்டுபிடித்தது குறித்த ஆய்வுக் கட்டுரையை 1886 ஆம் ஆண்டு வெளியிட்டார்.

நீதிக்கதை

 பொய்

நாதஸ்வரம் மற்றும் மேளதாளத்துடன் பாண்டியனும் அந்த கிராமத்து மக்களும் மந்தை வெளியில் காலை பஸ்ஸீக்காக காத்துக் கிடந்தனர். மதுரையிலிருந்து வரும் பஸ் அங்குதான் வந்து நிற்கும். அதில்தான் பத்தாவது பாஸ் ஆன பாண்டித்தேவரின் மகன் ரகு வருவான்.

அந்த கிராமத்தில் ரகு ஒருவன் தான் பள்ளிக்கூடத்தில் படிக்கிறான். அவன் படித்து அந்த கிராமத்தை முன்னுக்குக் கொண்டு வருவான் என்று எல்லோருமே நம்பினர். பஸ் வந்து நின்றது.

பஸ்ஸிலிருந்து ரகு இறங்கினான். அடுத்த வினாடி நாதஸ்வரமும் மேளதாளமும் முழங்கியது. பாண்டியன் தன் கையில் இருந்த மாலையை அவன் கழுத்தில் போட்டார்.

ரகுவை எல்லோரும் தெருக்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ரகுவின் அம்மா பேச்சியம்மா வீட்டு வாசலில் ஆரத்தி எடுத்தாள்.

தான் பரிட்சையில் தேறவில்லை என்பதை எப்படிச் சொல்வது?

“பாஸ் பண்ணிட்டியாப்பா” என்றாள் அம்மா

“ஆமாம்மா பாஸாயிட்டேன்” ஒரே ஒரு பொய்தானே என்று சமாதானப்படுத்திக் கொண்டான். ஆனால் அடுத்தடுத்து ஊரில் கேட்கும் எல்லோருக்கும் அதே பொய்யைத் திருப்பித் திருப்பிச் சொல்ல வேண்டியிருந்தது.

“என்னா தம்பி மேல படிக்கப் போறீயா?”

“ஆமாம்”

“டாக்டருக்குப் படிக்கப் போறியாமே”

“ஆமாம்”

“இப்போ எப்படி மதுரையிலேயே படிக்கலாமா. இல்லை மெட்ராசுக்குப் போவணுமா?”

இப்படி ஆளுக்கு ஆள் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டனர். இவனும் ஓயாமல் பொய் சொன்னான். “ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டி வரும்” என்று தன் ஆசிரியர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அடுத்த நாள் ரகுவின் அப்பாவும் அம்மாவும் இவனை பக்கத்து ஊர் கோவிலுக்குக் கூட்டிச் சென்று மொட்டை அடித்துக் கொண்டு வந்தனர். ரகு பத்தாவது பாஸ் செய்தால் மொட்டை போடுவதாக பிரார்த்தனையாம்.

ரகு உண்மையைச் சொல்ல முடியாமல் திண்டாடினான். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ என்று பயந்தான்.

அடுத்த நாள் இவன் பயந்தது போலவே இன்னொரு விஷயம் நடந்தது. பாண்டியன் கறவை மாட்டை கன்றுடன் சந்தையில் விற்றுவிட்டு வந்தார். இவனை காலேஜில் சேர்ப்பதற்கான ஏற்பாடாம்.

பாண்டியன் வசதியானவர் என்று சொல்ல முடியாது. இவனை காலேஜில் படிக்க வைக்கக் கூட நிலத்தை விற்றுத்தான் செலவு செய்ய திட்டமிட்டிருந்தார். ரகுவின் அம்மா ஒரு பக்கம் தன் மகன் காலேஜில் படிக்கப் போவது பற்றி ஊர்ப் பெண்களிடம் எல்லாம் முறை வைத்துப் பேசினாள்.

இனிமேலும் தான் உண்மையை மூடி மறைப்பது சரியல்ல என்று உணர்ந்து விட்டான் ரகு. அன்று இரவு தன் அப்பா அம்மா இருவரையும் அழைத்தான். இருவரையும் ஒருசேர நிற்கவைத்தான். இருவரின் கால்களிலும் விழுந்தான் ரகு.

“என்ன என்ன?” என்று பதட்டம் அடைந்தார் பாண்டியன். “நான் உங்களிடம் பொய் சொல்லி விட்டேன். நான் தேர்வில் தவறிய உண்மையை மறைத்து விட்டேன். என்னை மன்னித்து விடுங்கள்” என்று சொல்லி குலுங்கிக் குலுங்கி அழுதான்.

ரகுவின் அப்பாவும் அம்மாவும் ஒரு கணம் செய்வது அறியாமல் மலைத்து நின்றனர். பின்னர் பாண்டியன் அவனை தூக்கி மார்புடன் தழுவிக் கொண்டார்.

“பாண்டியன் மகன் காலேஜில் படிக்கிறான் என்று செல்வதை விட அவன் பொய் செல்ல மாட்டான் என்று சொல்வதையே நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்றார்.

“இனி எந்தக் காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்” என்று தந்தையின் கையில் அடித்து உறுதி சொன்னான் ரகு.

பாண்டியனுக்குப் பெருமையாக இருந்தது.

அவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

இன்றைய செய்திகள்

18.03.2026

⭐நிலவில் இருந்து 13,000 டெராவாட் மின்சாரம்... 11000 கி.மீ. நீள சோலார் பெல்ட் அமைக்கும் ஜப்பானிய நிறுவனம்!
உலகிற்கே தடையற்ற மின்சாரம் வழங்க நிலவைச் சுற்றி 11,000 கி.மீ நீளத்திற்கு சோலார் வளையத்தை உருவாக்கும் ஜப்பானின் பிரம்மாண்ட 'லூனா ரிங்' திட்டம்.

⭐மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஈரான் போர், இந்தியாவின் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள ரத்தினம் மற்றும் நகை ஏற்றுமதிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என (GJEPC) எச்சரித்துள்ளது.

⭐ஈரானிய எண்ணெய் கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல அனுமதித்து வருகிறோம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசென்ட் பேசியுள்ளார்.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக மீண்டும் விராட் கோலி களமிறங்க உள்ளார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த அவர், வரும் ஐபிஎல் தொடரில் அந்த கோப்பையை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் களமிறங்க உள்ளார்.

Today's Headlines

⭐ A Japanese company has proposed a massive “Luna Ring” project to generate 13,000 terawatts of electricity from the Moon. The plan involves building an 11,000 km-long solar belt around the Moon to provide uninterrupted power to the entire world.

⭐ The ongoing Israel–Iran conflict in the Middle East is expected to significantly impact India’s $2 billion gem and jewellery exports, according to the Gem & Jewellery Export Promotion Council (GJEPC).

⭐ The United States Commerce Secretary Scott Bessent has stated that Iranian oil tankers are being allowed to pass through the Strait of Hormuz.

*SPORTS NEWS*

🏀 In the IPL tournament, Virat Kohli is set to return to play for Royal Challengers Bangalore. After playing a key role in helping the team win their first-ever title last season, he will aim to defend the championship in the upcoming IPL season.

Covai women ICT_போதிமரம்