Thursday, November 27, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 28.11.2025






திருக்குறள்: 

குறள் 494: 

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து 
துன்னியார் துன்னிச் செயின்.                                                                     

விளக்க உரை: 

தக்க இடத்தை அறிந்து பொருந்தியவராய்ச் செயலைச் செய்வாராயின், அவரை வெல்ல எண்ணியிருந்த பகைவர் தம் எண்ணத்தை இழந்துவிடுவார்.

பழமொழி :

Effort is the bridge between dreams and reality.   

முயற்சி தான் கனவு மற்றும் நிஜம் இடையேயான பாலம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.

2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.

பொன்மொழி :

அன்பே சொர்க்கத்தின் நுழைவாயில். அன்புடன் பெருந்தன்மையான செயல்கள் புரியும்போது கடவுள் நம்மிடம் இருக்கிறார்- லூகி லார்கம்

பொது அறிவு : 

01.இந்தியத் திரையுலகின் மிக உயரிய விருதுஎது?

 தாதாசாகேப் பால்கே விருது 

  Dadasaheb Phalke Award

02. இந்தியாவின் ""டெக்கான் ராணி"" என்று அழைக்கப்படும் நகரம் எது 

                பூனே - Pune 

English words :

slip-fall because the ground is slippery,trip-fall because foot hit something

தமிழ் இலக்கணம்: 

 வழூஉசொற்கள்/ திருத்தம் 
1. அடமழை –அடைமழை
2. கோடாலி –கோடாரி
3. கருவேப்பிலை –கறிவேப்பிலை
4. அருவாமனை –அரிவாள்மனை
5. துவக்கப் பள்ளி –தொடக்கப்பள்ளி

அறிவியல் களஞ்சியம் :

 இதயத்தின் வேலை என்பது, இரண்டு காரணிகளால் நடைபெறுகிறது.

இதயத் தசைகளில் ஏற்படும் மின் தூண்டுதல்கள்

இந்த மின் தூண்டலினால் இதய அறைகளில் இருந்து இரத்தம் பீய்ச்சி அடிக்கப்படுவது.

நீதிக்கதை

 துளையிட்ட காசு

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். 

ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், அதிஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன் என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான். 

அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. எல்லாம் காசு கிடைத்த நேரம் என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசைத் தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். 

சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன. பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போல் உள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான். 

அவன் மனைவி சொன்னாள், என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள். 

இது எப்போது நடந்தது? என்று கேட்டான். 

அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள்.

அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான் என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்... !

இன்றைய செய்திகள்

28.11.2025

⭐தமிழகத்தில் தற்போது பருவமழை காரணமாகக் குளிர்ச்சி நிலவி வரும் நிலையில், சுவாசப் பாதிப்புகள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவல் அதிகரித்துள்ளதால் குழந்தைகளும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பாதுகாப்புடன் இருக்கும் படி சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.

⭐ஓசோனை சேதப்படுத்தும் ஆபத்தான ரசாயனங்கள் தடை செய்யப்பட்டதால் ஓசோன் துளையின் அளவு குறைந்துள்ளதாக நாசா (NASA) மற்றும் என்ஓஏஏ (NOAA) விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

⭐ தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவானது.
* வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து ஒரு சூறாவளி புயலாக மாற வாய்ப்பு உள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மகளிர் பிரிமீயர் லீக் தொடர் தொடங்கும் தேதி மற்றும் போட்டிக்கான இடங்கள் அறிவிப்பு.
மகளிர் பிரிமீயர் லீக் தொடர் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ந் தேதி தொடங்குகிறது.
இந்த தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் நடக்கவுள்ளது.

Today's Headlines

⭐ The health department has warned senior citizens over the age of 65 and children to stay safe.  So far days with the current monsoon season in Tamilnadu, there has been an increase in respiratory infections and the spread of influenza.

⭐ NASA and NOAA scientists have announced that the size of the ozone hole has decreased due to the ban on dangerous chemicals that damage ozone.

⭐ The prevailing low pressure area over the southwest Bay of Bengal has strengthened into a deep depression. It is likely to move north-northwestwards and intensify further into a cyclonic storm.

 *SPORTS NEWS* 

🏀 The Women's Premier League series of 20-over cricket has been announced with the start date and venues. The Women's Premier League series will start on January 9 next year. The series will be held in Navi Mumbai and Vadodara.

Covai women ICT_போதிமரம்

Wednesday, November 26, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 27.11.2025








திருக்குறள்: 

குறள் 492: 

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம் 
ஆக்கம் பலவுந் தரும். 

விளக்க உரை: 

மாறுபாடு பொருந்திய வலிமை உடையவர்க்கும் அரணோடு பொருந்தி ஏற்படுகின்ற வெற்றியானது பல வகைப் பயன்களையும் கொடுக்கும்.

பழமொழி :

Hard path leads to beautiful destinations. 

கடினமான பாதைகள் அழகான இடங்களுக்குக் கொண்டு செல்லும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.

2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.

பொன்மொழி :

அசாதாரணமான வாய்ப்புகளுக்காக காத்திருக்க வேண்டாம். பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள்

   ஒரிசன் ஸ்வெட் மார்டின்

பொது அறிவு : 

01. பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் இசைக்கலைஞர் யார்?

 எம். எஸ். சுப்புலட்சுமி-1998 

M. S. Subbulakshmi-1998

2.தமிழ்நாட்டின் தாகூர் என்று அழைக்கப்படுபவர் யார்?

     கவிஞர் வாணிதாசன்

 Poet Vanidasan

English words :

mourning -grieving

famished-extremely hungry

தமிழ் இலக்கணம்: 

 வழூஉச் சொற்கள் என்பவை எழுத்துக்களின் தவறான உச்சரிப்பால் அல்லது பேச்சுவழக்கில் ஏற்படும் பிழைகளால் உருவாகும் சொல்லாகும். இவை சரியான, தூய்மையான தமிழ் சொல்லுக்குப் பதிலாக, மக்கள் பேச்சுவழக்கில் பயன்படுத்துகின்ற தவறான சொற்கள் ஆகும். இனி வரும் நாட்களில் நாம் . வழூஉச் சொற்கள் சிலவற்றையும்  அதற்கு சரியான சொற்களையும் காண்போம். 
பேச்சுவழக்கு  சொல் & சரியான சொல்
1. தாவாரம்- தாழ்வாரம்
2. சின்னாபின்னம் - சின்ன பின்னம்
3. சீயக்காய் – சிகைக்காய்
4. சுவற்றில்- சுவரில்
5. சோத்துப்பானை  –சோற்றுப் பானை

அறிவியல் களஞ்சியம் :

ஒரு கண்ணாடி ஜாரை மறுசுழற்சி செய்வதன் மூலம் நாம் மூன்று மணி நேரம் தொலைக்காட்சி பயன்படுத்துவதற்காகச் செலவிடும் எனர்ஜியை சேமிக்க முடியும். எனவே மாணவர்களே மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களை உபயோகியுங்கள். 

நவம்பர் 27

லீ ஜூன் ஃபேன் புரூஸ் (Lee Jun-fan) (நவம்பர் 27, 1940 – ஜூலை 20 1973) இவரின் திரைப்படப் பெயரான புரூஸ் லீ என பரவலாக அறியப்படும். இவர்  ஆங்காங் மற்றும் அமெரிக்கத் திரைப்பட நடிகர், இயக்குநர் (திரைப்படம்), தற்காப்புக் கலைஞர், தற்காப்புக் கலைகள் பயிற்றுநர், மெய்யியலாளர்கள், ஜீத் குன் தோ எனும் உஷூ அல்லது சீன சண்டைக் கலையைத் தோற்றுவித்தவரும் ஆவார். இவரின் பெற்றோர் கன்தோனிஸ் ஆபரா , லீ ஹோய் சுன். இவர் ஊடகவியலாளார்கள், விளக்கவுரையாளர்கள், விமர்சகர்கள், மற்றும் தற்காப்புக் கலைஞர்களால் அனைத்துக் கால தற்காப்புக் கலைகளில் சக்திவாய்ந்த ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். 

நீதிக்கதை

 சுண்டெலி மனிதனாக மாறிய கதை


ஒரு ஞானியின் தியானம் கலைந்தபோது ஒரு சுண்டெலி ஞானியின் முன் வந்தது. சுண்டெலியை பார்த்து ஞானி, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். பூனையை கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றிவிட்டால், உங்களுக்கு புன்னியம் உள்ளது என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். 


இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அப்பூனை வந்து ஞானியின் முன் நின்றது. பூனையை கண்ட ஞானி, இப்போது என்ன பிரச்சனை என்று கேட்டார். என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றிவிட்டால் நன்றாக இருக்கும் என்றது பூனை. உடனே பூனையை, நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து அந்த நாய் வந்து ஞானியின் முன்பு நின்றது. இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள் என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். 


சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றிவிடுஙகள் என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். இப்போது உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார் ஞானி. எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடைமறித்த ஞானி, சுண்டெலியே உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டு போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம்தான் இருக்கிறது. 


நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆகையால், உள்ளத்தில் நம்பிக்கைகளையும், அச்சமற்ற தன்மையும் இல்லாதவரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப்பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக்கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்று போனால், அச்சம் சோர்வு போன்றவை உடலை கூணாக்கி உள்ளத்தை மண்ணாக்கிவிடும்.

இன்றைய செய்திகள்

27.11.2025

⭐ வரும் 29ம் தேதிஅதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நாளை காலை 11 மணிக்கு அதிகாரிகளுடன் முதலமைச்சர் முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

⭐இந்தியாவில் திடீரென முடங்கிய கூகுள் மீட் சேவை - பயனர்கள் அதிர்ச்சி

⭐ எத்தியோப்பியாவில் ஹேலி குப்பி எரிமலை வெடித்த தால், வானில் 14 கி.மீ உயரம் வரை சாம்பல் மேகங்கள் பறந்தன. இதனால் சர்வதேச விமானப்பாதைகள் குழப்பத்தில் சிக்கியுள்ளன.இந்த சாம்பல் மேகம், விமான இன்ஜின்களுக்கு ஆபத்தானது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஒருநாள் பேட்டர் தரவரிசையில் இந்திய அணியின் ரோகித் சர்மா மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
* முதல் இடத்தில் இருந்த நியூசிலாந்து வீரர் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

Today's Headlines

⭐ Chief Minister will hold an important meeting with officials tomorrow at 11 am regarding  red alert has been issued for heavy rains on the 29th November. 

⭐ Users shocked due to Google Meet service suddenly stopped in India yesterday.

⭐ The eruption of the Haley Cup volcano in Ethiopia sent ash clouds as high as 14 km into the sky. This has disrupted international flights. This ash cloud is dangerous for aircraft engines.

 *SPORTS NEWS* 

🏀 Indian batsman Rohit Sharma has regained the top spot in the ODI batsman rankings. * The New Zealander who was at the top has been relegated to the second spot.

Covai women ICT_போதிமரம்

Tuesday, November 25, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.11.2025








திருக்குறள்: 

குறள் 491: 

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் 
இடங்கண்ட பின்னல் லது 

விளக்க உரை: 

முற்றுகை செய்வதற்கு ஏற்ற இடத்தைக் கண்டபின் அல்லாமல் எச் செயலையும் தொடங்கக்கூடாது, பகைவரை இகழவும் கூடாது.

பழமொழி :

The fire that burns you,forges you. 

உன்னை எரிக்கும் தீ தான் உன்னை உருவாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.

2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.

பொன்மொழி :

ஆயிரம் ஆண்டு காலம் அடிமையாக வாழ்வதை விட அரை நிமிடம் சுதந்திர மனிதனாக வாழ்ந்து இறப்பது சிறந்தது

  Dr. அம்பேத்கர்

பொது அறிவு : 

01.உலகிலேயே பருப்பு வகைகளை அதிகளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?

  இந்தியா - India

02.தமிழ்நாடு சட்டப் பேரவையின் தற்போதைய சபாநாயகர்யார்?

  திரு. மு. அப்பாவு-Thiru. M. Appavu

English words :

incessant-constant

Androit-skillful

தமிழ் இலக்கணம்: 

 1. குறிலைத் தொடர்ந்து இடையின 'ர' கர மெய் வரவே வராது ஆனால் வல்லின 'ற' கரம் வரும் 
எ.கா. கர்மம் –தவறு
அர்ச்சனை –தவறு. 
கருமம், அருச்சனை என்றே எழுத வேண்டும்
விற்பனை, கற்சிலை, குற்றம், கற்றான்
2. கருப்பு என்பது பஞ்சத்தை குறிக்கும் நிறத்தை அல்ல.
       கறுப்பு என்ற வார்த்தையே நிறத்தை குறிக்கும்

அறிவியல் களஞ்சியம் :

 ஆண்களை விட பெண்களால் அதிக நிறங்களை காண முடியும்!

வண்ணங்களை வகைப்படுத்தி காணும் திறன் ஆனது மரபணுக்கள் எக்ஸ் குரோமோசோமில் காணப்படுகின்றன. இவ்வகை எக்ஸ் குரோமோசோம்கள் ஆனது பெண்களுக்கு இரண்டும், ஆண்களுக்கு ஒன்றும் இருக்கிறது. ஆக பெண்களால் ஆண்களை விட அதிக அளவில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியும்.

நவம்பர் 26

இந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) அல்லது சட்ட தினம்(Law Day) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக  அனுசரிக்கப்பட்டது. மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும்   இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.

நீதிக்கதை

 சிறுவனின் தன்னம்பிக்கை

ஒருவரின் விலை உயர்ந்த சீருந்தை (கார்) ஒரு சிறுவன் வியப்புடன் பார்ப்பதை பார்த்தார், அந்த சிறுவனின் ஆசையை அறிந்து கொண்ட அவர் சிறுவனை உக்காரவைத்து கொஞ்ச தூரம் ஓட்டினார். 

உங்களின் வாகனம் மிக அருமையாக இருக்கிறது , என்ன விலை என சிறுவன் கேட்டான். அவரோ தெரியவில்லை, இது என் சகோதரன் எனக்கு பரிசளித்தது என்றார் அந்த மனிதர். 

அப்படியா!! அவர் மிகவும் நல்லவர் என சிறுவன் சொல்ல, நீ என்ன நினைக்கிறாய் என எனக்குத்தெரியும், உனக்கும் என் சகோதரனைப்போல் ஒரு சகோதரன் வேண்டும் என நினைக்கிறாய் அல்லவா? என்றார். 

சிறுவன் சொன்னான். இல்லை, நான் அந்த உங்களின் சகோதரனைப்போல் இருக்கவேண்டும் என நினைக்கிறேன் என்றான்.

இன்றைய செய்திகள்

26.11.2025

⭐கோவையில் செம்மொழி பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

⭐காற்று மாசு அதிகரிப்பு எதிரொலி:
டெல்லியில் அரசு, தனியார் அலுவலகங்களில் 50% வீட்டிலிருந்தே வேலை

⭐பள்ளி, கல்லூரிகளில் அரசியல் அமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசிக்க மு.க.ஸ்டாலின் உத்தரவு

⭐16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த (டிசம்பர் 10 முதல்) ஆஸ்திரேலியாவில் தடைவிதிக்கப்ப ட்டுள்ளது போல டென்மார்க் & மலேஷியாவும் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடைவிதிக்க திட்டமிட்டுள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலக கோப்பை அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15 ஆம் தேதி மோதும் இந்தியா-பாகிஸ்தான். டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.

Today's Headlines

⭐Chief Minister M.K. Stalin inaugurated the Semmozhi Park in Coimbatore. 

⭐Increasing air pollution in New Delhi,  50% of government and private offices to proceed with their work from home.

⭐M.K. Stalin ordered to read the preamble of the Constitution in schools and colleges.

⭐Denmark & ​​Malaysia are also planning to ban social media use by those under 16 (as of December 10), similar to Australia's ban on social media use by those under the age of 16.

 SPORTS NEWS 

🏀T20 World Cup schedule released: India-Pakistan to clash on February 15 . 
20 countries are participating in the T20 World Cup.

Covai women ICT_போதிமரம்

Monday, November 24, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.11.2025

பிடல் காஸ்ட்ரோ







திருக்குறள்: 

குறள் 236: 

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் 
தோன்றலின் தோன்றாமை நன்று 

விளக்க உரை: 

ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.

பழமொழி :

Pain is the teacher of courage. 

வலி தான் தைரியத்தின் ஆசிரியன்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கல்வி கற்பது பணம் சம்பாதிக்க மட்டும் அல்ல, அறிவை வளர்க்கவும் தான்.

2.எனவே படித்து எனது அறிவை வளர்த்துக் கொள்வேன்.

பொன்மொழி :

உங்கள் எதிரிகளிடமும் நீங்கள் அன்பு காட்டுங்கள் .ஏனென்றால், அவர்கள் உங்களை தவறுகளை சுட்டிக்காட்டி நீங்கள் திருந்துவதற்கு வழி ஏற்படுத்துகிறார்கள். பெஞ்சமின் பிராங்கிளின்

பொது அறிவு : 

01.இந்தியாவின் பாரத ரத்னா விருதைப் பெற்ற முதல் பெண்மணி யார்?

இந்திரா காந்தி 1971
Indiragandhi-1971

02. பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை முதன் முதலில் வழங்கிய நாடு எது?

நியுசிலாந்து 1893
New zealand - 1893

English words :

audacious -  bold and daring

tranquil-peaceful and calm

தமிழ் இலக்கணம்: 

 ‘ர’& 'ற' கரம்
1.மெய்யெழுத்தை தொடர்ந்து இடையின ர வராது
எ.கா. 
நின்ரது 
முன்னின்ரு
தவறாக எழுதப் பட்டுள்ளது 
2. ஆனால் வல்லின ற‌ மெய்யெழுத்துக்கு பின்னர் வரும்
எ.கா –நின்றது
முன்னின்று

அறிவியல் களஞ்சியம் :

 அறிவியல் வரலாற்றில் இதுவரை மரபணு மாற்ற CRISPR-Cas9 தொழில்நுட்பம், பல விலங்குகள், தாவரங்கள் ஏன் பாக்டீரியா மீது கூட பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக ஜெர்மனியில் உள்ள பெய்ரூட் பல்கலை, சிலந்திகள் மீது பயன்படுத்தி உள்ளது. மரபணு மாற்றப்பட்ட சிலந்தி ஒளிர்கின்ற சிவப்பு நிற வலையைப் பின்னுகிறது. சிலந்திகளின் வலை நுால் பல துறைகளில் பயன்படுகிறது.

நவம்பர் 25

பிடல் காஸ்ட்ரோ அவர்களின் நினைவுநாள்


பிடல் காஸ்ட்ரோ (Fidel Alejandro Castro Ruz, (எசுப்பானியம்: [fiˈðel ˈkastro], ஆகஸ்ட் 13, 1926 - நவம்பர் 25, 2016) கியூபாவை சேர்ந்த பொதுவுடைமைப் புரட்சியாளரும் பொதுவுடைமை அரசியல்வாதியும் ஆவார். கியூபாவில் 1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டாவின் அரசை வீழ்த்தி தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற காஸ்ட்ரோ ,1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார்.கூபாவின் பொதுவுடைமைக் கட்சியின் முதல் செயலாளராக 1965 இல் பதவியேற்ற இவர் கூபாவை ஒற்றைக் கட்சி சமூகவுடைமைக் குடியரசாக்கினார். 49 ஆண்டுகள் கியூபாவை ஆண்ட காஸ்ட்ரோ பிப்ரவரி 24 2008 அன்று பதவியிலிருந்து விலகினார். உலகத்தில் நீண்ட காலத்துக்கு தலைமைப் பொறுப்பில் இருந்த தலைவர் காஸ்ட்ரோ மட்டுமே. பன்னாட்டளவில், காஸ்ட்ரோ 1979-ல் இருந்து 1983 வரை மற்றும் 2006 முதல் 2008 வரை, அணி சேரா இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார்.[2]

அமெரிக்காவில் இருந்து 93 மைல் தொலைவில் இருந்தாலும் கியூபாவை ஒரு சோசலிச நாடாகப் பேணிய பெருமை இவரைச் சாரும். இதைவிட ருசியா-அமெரிக்க பனிப்போர் நடந்த வேளையில் இவர் ருசியாவிற்குச் சாதகமாகப் பல பணிகளைச் செய்தார்.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள்

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் (International Day for the Elimination of Violence against Women) ஆண்டுதோறும் நவம்பர் 25 ஆம் நாள் அன்று உலகெங்கணும் கொண்டாடப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாள் ஆகும்.

உலகளாவிய ரீதியில் பெண்கள் இன்று பல விதமான வன்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை வெளி உலகிற்கு காட்டி அதற்கான நியாயமான தீர்க்கமான முடிவுகளை எடுப்பதற்காக சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினம் ஆகியன முன்வைக்கப்படுகின்றன.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 1999 டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது. இத்தீர்மானம் ஐக்கிய நாடுகள் அவையின் 54/ 134. இலக்க பிரேரணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

நீதிக்கதை

கழுதையின் தன்னம்பிக்கை


ஒரு விவசாயி வளர்த்து வந்த வயதான பொதி சுமக்கும் கழுதை ஒன்று தவறி அவன் தோட்டத்தில் உள்ள வறண்ட கிணற்றில் விழுந்துவிடுகிறது. உள்ளே விழுந்த கழுதை அலறிக்கொண்டே இருந்தது. அதை எப்படி கிணற்றிலிருந்து வெளியேற்றி காப்பாற்றுவது என்று அவன் விடிய விடிய யோசித்தும் ஒரு யோசனையும் புலப்படவில்லை. 


காப்பாற்ற எடுக்கும் எந்த முயற்சியும் அந்த கழுதையின் விலையை விட அதிகம் செலவு பிடிக்ககூடியதாக இருந்தது. அந்த கிணறு எப்படியும் மூடப்பட வேண்டிய ஒன்று. தவிர அது மிகவும் வயதான கழுதை என்பதால் அதை காப்பாற்றுவது வீண்வேலை என்று முடிவு செய்த அவன், கழுதையுடன் அப்படியே அந்த கிணற்றை மூடிவிடுவது என்று முடிவு செய்தான். 


அக்கம் பக்கத்தினரை உதவிக்கு கூப்பிட அனைவரும் திரண்டனர். சற்று அருகில் இருந்த ஒரு மண் திட்டிலிருந்து மண்ணை மண்வெட்டியில் அள்ளி கொண்டு வந்து அந்த கிணற்றில் அனைவரும் போட ஆரம்பித்தனர். கழுதை நடப்பதை உணர்ந்து தற்போது மரண பயத்தில் அலறியது. ஆனால் அதன் அலறலை எவரும் சட்டை செய்யவில்லை. இவர்கள் தொடர்ந்து மண்ணை அள்ளி அள்ளி கொட்ட கொஞ்சம் நேரம் கழித்து அதன் அலறல் சத்தம் அடங்கிவிட்டது. 


ஒரு பத்து நிமிடம் மண்ணை அள்ளி கொட்டியவுடன் கிணற்றுக்குள்ளே விவசாயி எட்டிப் பார்க்க, அவன் பார்த்த காட்சி அவனை வியப்பிலாழ்த்தியது. ஒவ்வொரு முறையும் மண்ணை கொட்டும்போது, கழுதை தனது உடலை ஒரு முறை உதறிவிட்டு, மண்ணை கீழே தள்ளி, அந்த மண்ணின் மீதே நின்று வந்தது. 


இப்படியே பல அடிகள் அது மேலே வந்திருந்தது. இவர்கள் மேலும் மேலும் மண்ணை போட போட கழுதை தனது முயற்சியை கைவிடாது, உடலை உதறி உதறி மண்ணை கீழே தள்ளி தள்ளி அதன் மீது ஏறி நின்று வந்தது. 


கழுதையின் இடைவிடாத இந்த முயற்சியால் அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு வழியாக கிணற்றின் விளிம்பிற்கே வந்துவிட்டது. 


விளிம்பை எட்டியவுடன் மகிழ்ச்சியில் கனைத்த கழுதை ஒரே ஓட்டமாக ஓடி தோட்டத்திற்குள் சென்று மறைந்தது. 


வாழ்க்கை பல சந்தர்ப்பங்களில் இப்படித் தான் நம்மை படுகுழியில் தள்ளிக் குப்பைகளையும், மண்ணையும் நம் மீது கொட்டி நம்மை சமாதி கட்ட பார்க்கும். ஆனால் நாம் தான் இந்த கழுதை போல தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்டு, அவற்றை உதறித் தள்ளி மேலே வரவேண்டும். 


நம்மை நோக்கி வீசப்படும் ஒவ்வொரு கல்லையும் சாமர்த்தியமாக பிடித்து படிக்கற்களாக்கிக் கொள்ளவேண்டும், எத்தனை பெரிய குழியில் நீங்கள் விழுந்தாலும். இத்தோடு நம் கதை முடிந்தது என்று கருதாமல் விடாமுயற்சி என்ற ஒன்றைக் கொண்டு நீங்கள் நிச்சயம் மேலே வரலாம். 

இன்றைய செய்திகள்

25.11.2025

⭐தமிழகத்தில் செயல்படும் அனைத்து உணவகங்களிலும் (சிறிய தேநீர் கடைகளிலிருந்து பெரிய ரெஸ்டாரண்ட்கள் வரை) சமையல் பணிகளிலும், உணவு பரிமாறும் பணிகளிலும் ஈடுபடும் ஊழியர்கள் கட்டாயமாக குடல் காய்ச்சல் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

⭐ 'ஆபரேஷன் சைஹாக் நடவடிக்கை மூலம் சைபர் குற்றங்களில் ஈடுபட்டு , பொது மக்களிடம் ரூ.254 கோடிக்கு மேல் மோசடி செய்த 42 பேரை டெல்லி போலீஸார் கைது செய்துள்ளனர்.

⭐பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான கராச்சியில் மின்வெட்டு காரணமாக பம்பிங் ஸ்டேஷன்கள் செயல்படாததால் கடும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀மகளிர் உலக கோப்பை கபடி: இந்திய அணி சாம்பியன்
இறுதிப்போட்டியில் இந்தியா - சீன தைபே அணிகள் மோதின.
பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா, சீன தைபே அணியை வீழ்த்தியது.

Today's Headlines

⭐ Tamil Nadu Food Safety Department has ordered that the employees involved in cooking and serving food in all the restaurants operating in Tamil Nadu (from small tea shops to big restaurants) must get the enteric flu vaccine compulsorily.

⭐ By 'Operation Cyhawk', 42 people who have been involved in cyber crimes and extorted more than Rs 254 crore from the public were arrested by Delhi Police for fraud.

Karachi, one of Pakistan's major cities, has experienced severe water shortages due to power cuts, and the pumping stations are not working.

🏀 Sports news

🏀Women's World Cup Kabaddi: Team India is the champion
India and Chinese Taipei teams clashed in the final.
India beat Chinese Taipei in a thrilling match.

Covai women ICT_போதிமரம்