Pages

Sunday, August 18, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.08.2024

 

உலக புகைப்பட நாள்

 




திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம் :காலம் அறிதல்

குறள் எண்:485

காலம் கருதி இருப்பர், கலங்காது
ஞாலம் கருதுபவர்.

பொருள்: உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக் கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக்கொண்டு பொறுத்திருப்பர்.

பழமொழி :

ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்

Let patience have her perfect work

இரண்டொழுக்க பண்புகள் :  

*எனக்கு வழங்கப்பட்ட வேலைகளை உரிய நேரத்தில் முடிப்பேன் .     

 *எனது கடமைகளை சரிவர செய்து, உரிமைகளைப் பெறுவேன்.

பொன்மொழி :

அறிவை ஞானமாக மாற்றி, ஞானம் குணத்தில் வெளிப்பட்டாலன்றி,  கல்வி என்பது ஒரு வீணான செயலாகும். –சாய் பாபா

பொது அறிவு : 

1. இந்தியாவில் மட்டும் காணப்படும் விலங்கு எது?

விடை: நீலகிரி தாஹ்ர் மான் 

2. இந்தியாவில் எந்த மாநிலத்தில் நிலக்கரி காணப்படுகிறது?

விடை: ஜார்கண்ட்

English words & meanings :

 worry-கவலை,

complication-சிக்கலானது

வேளாண்மையும் வாழ்வும் : 

மண் வளம் குறைந்து, நீர் ஆதாரம் குறைந்து, மழை பொய்த்தாலும், ஆடி விதை அறுவடையை சிறப்பாக்கும் என்னும் நம்பிக்கையைக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 19

உலக புகைப்பட நாள்

உலக புகைப்பட நாள் (World photograph day)[1] புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சிறந்த புகைப்படங்களுக்கு ஆண்டு தோறும் பல்வேறு அமைப்புகளால் விருதுகள் வழங்கப்படுகின்றன. பத்திரிக்கை துறையில் சிறந்த புகைப்படங்களுக்கு "வேர்ல்டு பிரஸ் போட்டோ' ,"டைம்' இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

உலக மனிதநேய நாள்

உலக மனிதநேய நாள் (World Humanitarian Day) என்பது மனிதாபிமானப் பணியாளர்களையும், மனிதாபிமான காரணங்களுக்காக தங்களது உயிர்களை இழந்தவர்களையும் நினைவுகூரும் ஒரு நாள் ஆகும். 

நீதிக்கதை


 பேராசை பிடித்த  பலூன் 

ஒரு ஊரில் பலூன் வியாபாரி ஒருவர் இருந்தார். அவர் விதவிதமாக  பலூன்களை ஊதி அவற்றை கிராமத்தில் கொண்டு விற்று வந்தார். அதையே தன் தொழிலாக அவர் செய்து வந்தார்.

அவருக்கு பலூன்கள் தங்களுக்கிடையே பேசுவது கேட்கும் சக்தி உண்டு. அவரிடம் விதவிதமான பலூன்கள் நிறைய உண்டு. ஒரு நாள் அவர் வீட்டிலிருந்து பலூன்களை ஊதி, பெருக்கி அவற்றை தன் வண்டியில் கட்டிக்கொண்டு இருந்தார்.

அப்போது திடீரென்று ஒரு பலூன் இவரிடம் பேச ஆரம்பித்தது. அதைக் கேட்டு அந்த வியாபாரி ஆச்சரியம் அடைந்தார். “இது என்ன இந்த பலூன்கள் தங்களுக்குள்ளே பேசுவது தானே எனக்கு கேட்கும் இப்போது என்னிடம் பேசுகிறதே”, என்று எண்ணிக் கொண்டார். 

அந்த பலூன், வியாபாரியிடம்  சொன்னது, “நான் மற்ற பலூன்களை விட மிகவும் அழகான பலூனாக இருக்க வேண்டும். எனவே இன்னும் என்னுள் காற்றை அடைத்து என்னை பெரிதாக மாற்றுங்கள்” என்றது.

அதற்கு அந்த வியாபாரி சொன்னார், “இதற்கு மேல் உன்னை ஊதி பெரிதாக மாற்றினால் நீ வெடித்து விடுவாய், எனவே என்னால் இதற்கு மேல் உன்னை ஊதி பெரிதாக மாற்ற முடியாது” என்றார். ஆனால் அந்த பலூன் மீண்டும் அவரிடம், “தயவுசெய்து என்னை கொஞ்சம் ஊதி பெரிதாக்குங்கள்” என்று பணிவுடன் கேட்டது.

அந்த பலூன் வியாபாரியும் சரி என்று அந்த பலூனில் காற்று நிரப்ப ஆரம்பித்தார். அந்த பலூன் மற்ற எல்லா பலூன்களை விடவும் பெரிதாகவும் அழகாகவும் மாறியது. அந்தப் பெரிய பலூன் மற்ற பலூன்களிடம் சொன்னது “உங்கள் எல்லாரையும் விட நான் தான் மிகவும் பெரிதாகவும் அழகாகவும் இருக்கிறேன், எனவே இன்றைக்கு கிராமத்தில் விற்கும் போது குழந்தைகள் அனைவரும் என்னை தான் வேண்டும் என்று கேட்பார்கள்” என்று மற்ற பலூன்களிடம் ஏளனமாக கூறியது.

இதைக்கேட்ட பலூன் வியாபாரி நீ என்னிடம் பணிவாக கேட்டதால் தான் நான் மீண்டும் உன்னுள் காற்றை நிரப்பி பெரிதாக மாற்றினேன். நீ இவ்வாறு தற்பெருமையுடன் பேசக்கூடாது என்றார். 

அவர் கிராமத்தில் சென்று, “பலூன்…. பலூன்….! மிகவும் அழகான பலூன்கள் என்னிடம் உள்ளது ஓடி வாருங்கள் குழந்தைகளே” என்றார். அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் அனைவரும் பலூன்களை வாங்க ஓடி வந்தார்கள்.

அப்போதே அந்த குழந்தைகள் அனைவருக்கும் அந்த பெரிய பலூன் மிகவும் பிடித்தது. எல்லா குழந்தைகளும் அந்த பெரிய பலூனை வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது அந்த பெரிய பலூன் மற்ற பலூன்களிடம் சொன்னது, “நான்தான் உங்களிடம் சொன்னேனே எல்லோருக்கும் என்னை தான் பிடிக்கும் என்று” சொல்லிக் கொண்டே சிரித்தது. பின்னர் ஒரு சிறுவன் அந்த பலூனை வாங்கிக் கொண்டு சென்றான்.

மற்ற குழந்தைகள் வேறு பலூன்களை வாங்கி அதை வைத்து விளையாட ஆரம்பித்தார்கள். அந்த சிறுவன் இந்த பெரிய பலூனை வைத்து விளையாடிக் கொண்டு சென்றான். அப்போது திடீரென்று அந்த பலூன் ஒரு சிறிய  மரக்கிளையில் மாட்டியது. இதை அனைத்தும் அந்த வியாபாரி பார்த்துக்கொண்டே இருந்தார்.

அப்போது அவர் தன் மனதில் சிந்தித்தார் “இந்த பலூன் சிறிது நேரம் முன்பு வரை எவ்வளவு தற்பெருமையாக தன்னை பற்றி பேசிக்கொண்டிருந்தது” என்று எண்ணி சிரித்தார்.

 நீதி: அளவுக்கு மீறி தற்பெருமை கொள்ள கூடாது.

இன்றைய செய்திகள்

19.08.2024

* இந்தியாவின் 2-வது பொருளாதார மாநிலமாக தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளது: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

* தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என்றும், வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விமான நிலையங்களிலேயே பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்றும்   அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

* 12 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்.

* பிளாஸ்டிக் கழிவுகளில் சாலைகள் அமைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை.

* பெண் மருத்துவர் கொலை வழக்கு: தானாக முன்வந்து விசாரிக்கிறது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு.

* மனிதாபிமான உதவியாக சிரியாவுக்கு இந்தியா 1,400 கிலோ புற்றுநோய் எதிர்ப்பு மருந்தை அனுப்பியுள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

* 2-வது டெஸ்ட்: வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய தென் ஆப்பிரிக்கா.

* சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெசிகா பெகுலா,    
இகா ஸ்வியாடெக் ஆகியோர்
 அரையிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* Tamil Nadu has grown as India's 2nd economic state: Chief Minister Stalin is proud of this achievement 

 * Health Minister Subramanian said that no one has been infected with monkey fever in Tamil Nadu and people coming from foreign countries are tested at the airports.  

 * Chance of heavy rain at places in 12 districts today: Chennai Meteorological Center's information.

*  Central government advises states to build roads on plastic waste.

 * Woman doctor murder case: Supreme Court's Chief Justice bench, took the case on its own initiative.

 * India has sent 1,400 kg of anti-cancer medicine to Syria as humanitarian aid, the Union Ministry of External Affairs said.

*  ICC has released the schedule for the Women's Under-19 T20 World Cup series.

* 2nd Test: South Africa beat West Indies to clinch the series.

 * Cincinnati Open Tennis;  In women's singles, Jessica Pegula, Iga Svyatek Advance to the semi-finals.

 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment