Pages

Monday, January 6, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.01.2025

 


  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

 அதிகாரம்: மருந்து 

குறள் எண்:945

 மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துஉண்ணின்
 ஊறுபாடு இல்லை உயிர்க்கு.

பொருள்: உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவையே என்றும் அளவோடு உண்டால் உயிர்க்கு நோய் ஏதுமில்லை.

பழமொழி :

அதிகம் கேள், குறைவாகப் பேசு

Hear more, but talk less

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.     

  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.

பொன்மொழி :

எல்லோருடைய  வாழ்க்கையும்  வரலாறு ஆவதில்லை,வரலாறாய் ஆனவர்கள்  தனக்காக வாழ்ந்ததில்லை---காமராஜர்  

பொது அறிவு : 

1. உலக பரப்பளவில் இந்தியா எத்தனையாவது நாடாகும்? 

விடை: ஏழாவது.         

 2. அம்புலிமாமா என்ற சிறுவர் பத்திரிக்கை முதன்முதலில் எந்த ஆண்டு வெளிவந்தது?

 விடை: 1947

English words & meanings :

 Cycling.      -      மிதிவண்டி 

Football        -      கால்பந்து

வேளாண்மையும் வாழ்வும் : 

 மிஞ்சியுள்ள உறையாத சுத்தநீர்தான் நிலத்தடி நீராகக் கண்டெடுக்கப் படுகின்றது. அதிலும் ஒரு சிறிய பின்னம் நிலத்தின்மேல் அல்லது காற்றில் இருக்கும்.

நீதிக்கதை

 பூனையும் நரியும்


ஒரு மாலை நேரத்தில காட்டுல ஒரு பூனையும் நரியும் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தன. “இந்த வேட்டை நாய்கள் ரொம்ப மோசமானது எனக்கு அவர்களை பிடிக்காது”, என்று நரி சொல்லியது . “ஆமா ஆமா அவர்களை எனக்கும்   சுத்தமா பிடிக்காது” என்று பூனையும் சொன்னது.


“ அவை ரொம்ப வேகமாக ஓடும். அப்படி வேகமாக ஓடினாலும் அவர்களால் என்னை பிடிக்க முடியாது.ஏனென்றால் ,  அவர்களிடம் இருந்து தப்பிக்க எனக்கு ஏகப்பட்ட வழிகள் தெரியும்” என்று நரி சொன்னது. “வழியா? அப்படி என்ன வழி? எனக்கும் கொஞ்சம் சொல்”, என்று அந்தப் பூனை கேட்டது.


அதற்கு நரிசொல்லியது ,  "என்னிடம் ஏகப்பட்ட வழி இருக்கு. நான் கள்ளிச் செடிகளை எகிறி குதித்து ஓடுவேன், புதருக்கு உள்ள போய் ஒளிந்து விடுவேன்”. என்று எல்லாம் சொல்லி தம்பட்டம் அடித்துக்கொண்டு இருந்து அந்த நரி.


“நிஜமாகவா”? என்று அந்தப் பூனை கேட்டது . அதற்கு அந்த நரி சொன்னது, “ஆமா அதில் ஒன்று கூட உனக்கு சொல்லி தர முடியாது, ஏனென்றால் அது எல்லாமே என்னை மாதிரி புத்திசாலிங்க செய்யக் கூடியது” என்று அந்த நரி பெருமையாக பேசிக் கொண்டு இருந்தது. அதற்கு பூனை “எனக்கு ஒரே ஒரு வழி தான் தெரியும்” என்று சோகமாக சொன்னது. இவ்வாறு நரியும் பூனையும் பேசிக் கொண்டிருக்கும் போது வேட்டை நாய்கள் ஓடி வரும் சத்தம் கேட்டது.


உடனே பூனை “என்னோட வழியை பயன்படுத்தி நான் என்ன காப்பாற்றி கொள்ள போகிறேன்” என்று கூறி விட்டு பக்கத்திலிருந்த ஒரு மரத்தில் ஏறியது. அதன்பின் “நீ எப்படி உன்னை காப்பாற்றி கொள்ள போகிறாய் என்று நானும் 

பார்க்கிறேன்” என்று அந்த நரியிடம்  பூனை சொன்னது. 


அந்த நரி பூனையிடம் சொன்ன எல்லா வழிகளையும் பயன்படுத்தியும் நரியால் அந்த வேட்டை நாய்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.


நீதி : தேவையில்லாத பல விஷயங்களை கத்துக்குறது விட, முக்கியமான ஒரு விஷயத்தை கத்துகிறது எப்பவுமே நல்லது.

இன்றைய செய்திகள்

07.01.2025

* உதகையை உறைய வைக்கும் உறைபனி பொழிந்துவரும் நிலையில் அவலாஞ்சியில் மைனஸ் 1 டிகிரிக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

* சிந்துவெளி பண்பாட்டு எழுத்து முறையை புரிந்து கொள்ள வழிவகை செய்தால் தனி நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.8.57 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

* ஆசியாவின் மிகப் பெரிய 15-வது விமானக் கண்காட்சியான - ஏரோ இந்தியா 2025 - கர்நாடகாவின் பெங்களூருவில் பிப்ரவரி 10 முதல் 14 வரை நடைபெறும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள உலகின் மிகப் பெரிய அணையால் இந்தியா மற்றும் வங்கதேசத்துக்கு பாதிப்பு இருக்காது என்று சீனா தெரிவித்துள்ளது.

* ஹாக்கி இந்தியா லீக்: உ.பி. ருத்ராஸ் அணியை வீழ்த்தி தமிழ்நாடு டிராகன்ஸ் அணி வெற்றி.

* மகளிர் கிரிக்கெட்: அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.

Today's Headlines

* Avalanche recorded a minus 1 degree Celsius temperature as Ooty was gripped by a freezing cold.

* Chief Minister M.K. Stalin has announced that an individual or organization will be awarded one million US dollars (about Rs. 8.57 crore) if they help in understanding the Indus Valley Civilization script.

* Asia's 15th largest air show - Aero India 2025 - will be held in Bengaluru, Karnataka from February 10 to 14, the Defense Ministry has said.

* China has said that the world's largest dam to be built across the Brahmaputra river will not affect India and Bangladesh.

* Hockey India League: Tamil Nadu Dragons defeat UP Rudras.

* Women's Cricket: India's team announced for the ODI series against Ireland.

Covai women ICT_போதிமரம்

Sunday, January 5, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 06.01.2025

 

கபில்தேவ்

  






திருக்குறள்: 

பால் பொருட்பால் 

அதிகாரம்:மருந்து

குறள் எண் :944
அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறுஅல்ல
துய்க்க துவரப் பசித்து.

பொருள்:

முன் உண்ட உணவு செரித்த தன்மையை அறிந்து மாறு பாடில்லாத உணவுகளைக் கடைப்பிடித்து, அவற்றையும் நன்றாகப் பசித்தபிறகு உண்ண வேண்டும்.

பழமொழி :

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்

Face the danger boldly than live in fear.

இரண்டொழுக்க பண்புகள் :   

 * எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எனவே, நான் எண்களின் நான்கு அடிப்படைச் செயல்பாடுகளையும், தமிழ், ஆங்கில எழுத்துக்களையும் நன்கு கற்றுக்கொள்வேன்.     

  *பிழையின்றி பேசவும், பிழையின்றி எழுதவும் என்னால் முடியும். நான் கற்றுக்கொள்வேன்.

பொன்மொழி :

ஆயிரம் முறை தோற்றாலும் லட்சியத்தை கைவிடாதீர்கள். நிச்சயம் ஒரு நாள் வெற்றி கிடைக்கும்---சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

1. குழந்தைகள் உதவி எண் என்ன? 

விடை : 1098.          

2. இறந்த பிறகும் உடலில் எந்தப் பகுதி வளரும்? 

விடை: விரல் நகம்

English words & meanings :

 Climbing.       -      ஏறுதல்

 Cricket.          -    மட்டைப்பந்து

வேளாண்மையும் வாழ்வும் : 

 நல்ல நீரில் மூன்றில் இருபங்குகளுக்கும் சிறிது அதிகமாக பனிப் பாறைகளில் மற்றும் துருவப்பனி ஆறுகளில் உறைந்திருக்கும்

ஜனவரி 06

கபில்தேவ் அவர்களின் பிறந்தநாள்



கபில்தேவ் ராம் லால் நிகாஞ்ச் (Kapil Dev Ram Lal Nikhanj பிறப்பு: ஜனவரி 6, 1959) என்பவர் முன்னாள் இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் இந்திய அணி பெற்ற தலைசிறந்த அணித்தலைவர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவரை நூற்றாண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரர் என விஸ்டன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002ஆம் ஆண்டில் அறிவித்தது.

1983-ல் இந்தியா உலகக்கோப்பையை வென்றபோது அணியின் தலைவராக இருந்தார். அக்டோபர் 1999 முதல் ஆகஸ்ட் 2000 வரை இந்தியத் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். 1994 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். 

கிரிகோர் யோவான் மெண்டல் அவர்களின் பிறந்தநாள்






கிரிகோர் யோவான் மெண்டல் (Gregor Johann Mendel, சூலை 20, 1822 – சனவரி 6, 1884), மரபியல் குறித்த அடிப்படை ஆய்வுப் பணிகளுக்காக அறியப்படும் ஆத்திரிய நாட்டைச் சேர்ந்த ஒரு அகத்தீனிய அவைத் துறவி. இவரை மரபியலின் தந்தை என்று அழைக்கிறார்கள்.

மெண்டல், தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் ஆய்வு மேற்கொண்டார். தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். பிற்காலத்தில், இவ்விதிகள் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டன. 1866ல் இது குறித்த ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றினை எழுதினார். எனினும், இக்கட்டுரையின் முக்கியத்துவத்தை, அவர் வாழ்நாளில் எவரும் உணரவும் இல்லை; ஏற்கவும் இல்லை. 1900ல் Correns, De Vries, Tschermak என்ற மூன்று தனிப்பட்ட ஆய்வாளர்கள் மெண்டல் எழுதிய கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர். இன்று, மெண்டல் வரையறுத்த கோட்பாடுகள் மரபியலின் அடிப்படையாக விளங்குகின்றன.

நீதிக்கதை

 பூனையின் புதையல் வேட்டை 


முன்னொரு காலத்தில் ஒரு பங்களாவில் பூனை ஒன்று வசித்து வந்தது. அது ஆயிரக்கணக்கான எலிகளை அடிமைத்தனம் செய்து வந்தது. எலிகளை பயன்படுத்தி அந்த கிராமத்திலுள்ள மக்களிடமிருந்து பணம், தங்க காசுகள் ஆகியவற்றை திருட செய்தது.


எலிகள் அனைத்தும் பூனையின் மேல் கடும் கோபத்தில் இருந்தனர். அதனால் இந்த பூனைக்கு ஒரு பாடம் கற்றுக்கொடுக்கவேண்டும், என்று எலிகள் அனைத்தும் சேர்ந்து திட்டமிட்டனர். அப்போது புஜி என்கிற எலி தன்னிடம் ஒரு திட்டம் இருப்பதாக சொல்லி ஒரு வரைபடத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு வந்தது.


புஜி தன் திட்டத்தை மற்ற எலிகளிடம் சொன்னது. மற்ற எலிகள் அனைத்தும் அந்த திட்டத்திற்கு சம்மதித்தன. அவர்கள் பூனையிடம் சென்று, “பூனை ராஜா எங்களிடம் ஒரு வரைபடம் உள்ளது. அந்த வரைபடத்தை பின்பற்றினால் நாம்  பெரிய புதையலை கண்டுபிடிக்க முடியும்” என்று சொன்னார்கள்.


அந்தப் பூனை எலிகளிடம் இருந்து அந்த வரைபடத்தை வாங்கிக்கொண்டு, “நானே சென்று இந்த புதையலைக் கண்டு பிடிக்கிறேன். உங்களுடைய உதவி எனக்கு தேவை இல்லை” என்று சொன்னது.


அந்தப் பூனை வரைபடத்தை பின்பற்றி புதையலைத் தேடி சென்றது. நடந்து நடந்து மிகவும் சோர்வுற்றது அந்தப் பூனை. ஓய்வெடுப்பதற்காக ஒரு இடத்தில் அமர்ந்தது, இந்த எலிகள் பூனைக்கு தெரியாமல் அதன் பின் சென்றனர்.


சிறிது நேரம் கழித்து மீண்டும் தன் பயணத்தை தொடங்கியது அந்த பூனை. அந்த வரைபடத்தின் படி இடத்தை அடைந்த பூனை, அங்கே குழி தோண்ட ஆரம்பித்தது. எவ்வளவு தோண்டியும் புதையல் கிடைக்கவில்லை. இருந்தும் அந்தப் பூனை தோண்டிக் கொண்டே சென்றது. அப்போது மிகவும் ஆழமாகத் தோண்டியதால் அந்தப் பூனையால் வெளியே வர முடியாமல் உள்ளே மாட்டிக் கொண்டது.


உதவிக்காக அந்தப்  பூனை சத்தமிட்டு கொண்டு இருந்தது. அப்போது எலிகள் அனைத்தும் அந்த குழியின் மேல் இருந்து எட்டி பார்த்தன. அந்தப் பூனை எலிகளிடம் உதவி கேட்டது.  அதற்கு அந்த எலிகள், இது உனக்கு தேவதை கொடுத்த புதையல் இதை விட்டு வெளிய வரவே முடியாது” என்று சொன்னார்கள்.


பின்னர் கிராமத்திற்கு திரும்பி சென்று தாங்கள் திருடிய அனைத்து காசுகள் மற்றும் நகைகளை திருப்பி அந்த கிராம மக்களிடம் கொண்டு ஒப்படைத்தனர். கிராம மக்கள் மிகவும் சந்தோஷத்துடன் எலிகளை பாராட்டினார்கள்.

இன்றைய செய்திகள்

06.01.2025

* மதுரை மாவட்டத்தின் புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் காளைகள், வீரர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது: மாவட்ட நிர்வாகம் தகவல்.

* விண்வெளியில் முளைக்க தொடங்கிய காராமணி பயறு விதைகள்: பரிசோதனை வெற்றி என இஸ்ரோ அறிவிப்பு.

* மகாராஷ்டிராவில் ஆண்டுக்கு 365 நாளும் 12 மணி நேரமும் செயல்படும் பழங்குடியின கிராம பள்ளி: மாநில கல்வி அமைச்சர் பாராட்டு.

* அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 6 பேர் எம்பிக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

* ஹாங்காங் ஓபன் டென்னிஸ் போட்டி; சாம்பியன் பட்டம் வென்றார் பிரான்சின் முல்லர்.

* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி; சாம்பியன் பட்டம் வென்றார் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா.

Today's Headlines

* Online booking for bulls and athletes participating in the famous Avaniyapuram, Palamedu and Alanganallur jallikattu in Madurai district begins today: District administration information.

* Karamani lentil seeds that started sprouting in space: ISRO announces that the experiment is a success.

* Tribal village school in Maharashtra that operates 12 hours a day, 365 days a year: State Education Minister praises.

* 6 people of Indian origin took oath as MPs in the US House of Representatives.

* Hong Kong Open tennis tournament; Francine Muller won the champion title.

* Brisbane International tennis tournament; Belarusian player Aryna Sabalenka won the champion title.

Covai women ICT_போதிமரம்

Thursday, January 2, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.01.2025

 

சாவித்திரிபாய் புலே

  






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண்:943

அற்றால் அளவுஅறிந்து உண்க; அஃதுடம்பு
பெற்றான் நெடிதுஉய்க்கும் ஆறு.

பொருள்:முன் உண்ட உணவு செரித்துவிட்டால், பின் வேண்டிய அளவு அறிந்து உண்ணவேண்டும்; அதுவே உடம்பு பெற்றவன் அதை நெடுங்காலம் செலுத்தும் வழியாகும்.

பழமொழி :

Beauty is a short-lived reign.

அழகின் ஆட்சி அற்ப காலமே.

இரண்டொழுக்க பண்புகள் :  

   *புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை  கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.  

*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.

பொன்மொழி :

சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்பவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் --பெர்னாட்ஷா

பொது அறிவு : 

1. கடலில் கலக்காத பெரிய நதி எது? 

விடை : யமுனை. 

2. இந்தியாவில் நோபல் பரிசு பெற்ற முதல் பெண் யார்? 

விடை : அன்னை தெரசா

English words & meanings :

 Basketball      -     கூடைப்பந்து 

 Boxing          -       குத்துச்சண்டை

வேளாண்மையும் வாழ்வும் : 

 நிலத்திலிருந்து பெறும் நீரில் 97% உப்பு நீராகவே உள்ளது. கடலில் காணப்படும் நீர். 3% மட்டுமே புதுப்புனலாக அதாவது நல்ல நீராக இருக்கும்

ஜனவரி 03

சாவித்திரிபாய் புலே அவர்களின் பிறந்தநாள்


சாவித்திரிபாய் புலே (Savitribai Jyotirao Phule, 3 சனவரி 1831 – 10 மார்ச் 1897) ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார்.இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என அழைக்கப்படுகிறார். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெ வாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.[1][2]

சாவித்திரிபாய் புலே பிறப்பின் 186 ஆவது ஆண்டு நிறைவை தேடு பொறி கூகுளானது, ஜனவரி 3, 2017 அன்று ”கூகுள் டூடுள்” கொண்டு அடையாளப்படுத்திச் சிறப்பித்தது

நீதிக்கதை

 இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு. 


ஒரு பகல் வேளையில் ஒரு பயணி தன்னுடைய பையை சுமந்து நடந்து கொண்டு இருந்தார். அவருக்கு ஓய்வு தேவைப்படுவது போல் இருந்தது. சுற்றி பார்த்தபோது கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கூட காணமுடியவில்லை. பாலைவனம் மாதிரி இருந்தது அந்த இடம். 


ரொம்ப தூரம் நடந்ததற்கு பின் அவர் ஒரு அழகான தோட்டத்திற்கு உள்ளே நுழைந்தார். அங்கு நிறைய மரங்களும், பழங்களும், பூக்களும்  இருந்தன . அங்கு மரங்கள் முழுவதும் ஆரஞ்சு பழங்களால் நிரம்பியிருந்தது.  அவருக்கு  கீழே விழுந்த ஒரு ஆரஞ்சுப் பழம் கிடைத்தது. அதை அவர் எடுத்து உண்ண ஆரம்பித்தார்.


அந்த ஆரஞ்சு மரத்துக்குப் பக்கத்தில் ஒரு பூசணி கொடியை பார்த்தார் . அதில் மிகவும் பெரிய பெரிய பூசணிக்காய்கள் இருந்தது. அவர் அதை பார்த்ததும் , “இந்த பூசணிக்கொடி இவ்வளவு சிறியதாக இருக்கிறது.ஆனால் காயோ ரொம்ப பெரியதாக இருக்கிறது . ஆரஞ்சு பழமோ சிறியதாக  இருக்கிறது.ஆனா அது பெரிய மரத்தில் காய்க்கிறது.இந்த இயற்கை ரொம்பவே முரண்பாடாக இருக்கிறது . 

இந்த இயற்கையைப் படைத்தவர்களுக்கு கண்டிப்பாக ஒன்றுமே தெரியாமல் தான் இருந்திருக்கும்"

என்று யோசித்தார்


அவ்வாறு சுற்றி இருந்த எல்லா படைப்புகளையும் ஏளனம் செய்து கொண்டு இருந்தார். சிறிது நேரம் கழித்து  ரொம்பவே தூக்கம் வருவதுபோல் இருக்க மரத்துக்கு அடியில் தலைசாய்த்து அசந்து தூங்கி விட்டார் 


திடீரென்று  அவர் தலையில் ஏதோ வந்து விழுந்தது. அவர் எழுந்து பார்த்தபோது ஒரு ஆரஞ்சு பழம் தன் காலுக்கு பக்கத்தில்  கிடந்தது. உடனே அவருக்கு புரிந்தது இந்த ஆரஞ்சு பழம் தான் தன்னுடைய தலையில் விழுந்தது என்று. 


அப்போதுதான் திடீரென்று அவர் யோசித்தார் “இந்த  ஆரஞ்சு பழத்திற்கு பதிலாக பூசணிக்காய் தன்னுடைய தலையில் விழுந்திருந்தால் என்னவாயிருக்கும்” 

என்று பயந்தார் . அவர் மனதில்  "பூசணிக்காய் இருக்க வேண்டிய இடம் தரைதான்" என்று அப்போது நினைத்தார்.


இயற்கையின் ஒவ்வொரு படைப்புக்கும் அர்த்தம் உண்டு என்பதை அவர் உணர்ந்தார்.

இன்றைய செய்திகள்

03.01.2025

* கல்வி வளாகங்​களில் வெளிநபர்கள் நுழைய கட்டுப்​பாடுகள் விதிக்க வேண்​டும் என்று தேசிய மகளிர் ஆணையத்​தின் உறுப்​பினர் அறிவுறுத்​தல்.

* பதவிக் காலம் முடிய​வுள்ள 28 மாவட்​டங்​களில் உள்ள ஊராட்​சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிக்க தமிழக அரசு முடிவு: அவசர சட்டத்​துக்கான கோப்புகள் ஆளுநர் ஒப்பு​தலுக்கு அனுப்​பப்​பட்​டுள்ளன.

* 1901-க்குப் பின் இந்தியாவில் மிக வெப்பமான ஆண்டு 2024 தான். அந்த வகையில் கடந்த 123 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2024-ல் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

* ஆப்கானிஸ்தானில் நேற்று திடீர் நிலநடுக்கம்: இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

* 6-வது ஹாக்கி இந்தியா லீக் போட்டி: ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி.

* பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டி: செர்பிய வீரர் ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்.

Today's Headlines

* National Commission for Women members advise that restrictions should be imposed on the entry of outsiders into educational institutions.

* The Tamil Nadu government has decided to appoint special officers for village administrations in 28 districts whose term is about to end: Files for the Emergency Act have been submitted to the Governor for approval.

* 2024 is the hottest year in India since 1901. In that regard, the India Meteorological Department has announced that 2024 has recorded the highest temperature in the last 123 years.

* A sudden earthquake occurred in Afghanistan yesterday: The National Seismological Center reported that it was recorded as 4.3 on the Richter scale.

* 6th Hockey India League match: Sarachi RAR Bengal Tigers team won.

* Brisbane International Tennis Tournament: Serbian player Djokovic advances to the quarterfinals.

Covai women ICT_போதிமரம்

Wednesday, January 1, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 02.01.2025

  


 






திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்:மருந்து

குறள் எண் :942

மருந்துஎன வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்.

பொருள்:முன் உண்ட உணவு செரித்த தன்மையை ஆராய்ந்து போற்றிப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

பழமொழி :

Many hands make work light\

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

இரண்டொழுக்க பண்புகள் :  

   *புத்தாண்டில் புதிதாக ஒரு நல்ல விஷயத்தை  கற்றுக்கொள்ள உறுதி ஏற்பேன்.  

*காலம் தவறாமை , கடமைகளை சரிவர செய்தல் ஆகியவற்றை உறுதியாகப் பின்பற்றுவேன்.

பொன்மொழி :

எதற்கும் தயாராக இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு நம்மை தேடி வரும். - ஆபிரகாம் லிங்கன்

பொது அறிவு : 

1. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்? 

விடை: ரோமானியர்கள். 

2. முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை தந்த நாடு எது?

 விடை: நியூசிலாந்து

English words & meanings :

 Archery      -      வில்வித்தை

 Badminton       -      பூப்பந்து

வேளாண்மையும் வாழ்வும் : 

 இந்த பருவத்தில் நாம் வேளாண்மைக்கு முக்கிய தேவையான நீர் வளங்கள், அதை சேமிக்க வேண்டிய முறைகள் குறித்து பார்ப்போம்

நீதிக்கதை

 நரியும் புலியும் 


ஒரு அடர்ந்த காட்டிற்குள் பல விலங்குகள் வசித்து வந்தன. அங்குள்ள அனைத்து விலங்குகளுக்கும் புலியை கண்டால் மிகவும் பயம். தூரத்தில் புலி வருவதை பார்த்தாலே இவர்கள் அனைவரும் பயந்து ஓடுவார்கள்.ஒருநாள் புலி வந்து கொண்டிருக்கும்போது, மற்ற விலங்குகள் அந்த புலியை பார்த்து பயந்து ஓடுவதை நரி பார்த்துக் கொண்டு இருந்தது.


அந்த நரிக்கு புலியின் மேல் பொறாமை  உண்டு, “இந்த விலங்குகள் எல்லாம் புலியை மட்டும் பார்த்து பயப்பட்டு ஓடுகிறார்கள், ஆனால் என்னை பார்த்து யாரும் பயப்படுவதில்லையே” என்று எண்ணி நானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தது.


அப்போதுதான் அது முடிவெடுத்தது. நானும் புலியைப் போல் மாறினால் என்னை பார்த்து எல்லாரும் நிச்சயமாக பயப்படுவார்கள் என்ற எண்ணத்தில், கொல்லனிடம் சென்று நரி “எனக்கு புலியை போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது கோடு போடு” என்றது. அந்தக் கொல்லனும் கம்பியை பழுக்கக் காய வைத்து அந்த நரியின் மேல் சூடு போட்டான். 


முதல் சூடு போட்டவுடனே அந்த நரி வலியால் கத்த ஆரம்பித்தது. அந்த நரி கொல்லனிடம், “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் ஆனால் இப்படி வலி இருக்கக்கூடாது வேறு ஏதாவது செய்” என்றது. அதற்கு அந்த கொல்லன், “வலி இல்லாமல் உனக்கு கோடு போட வேண்டுமென்றால் நீ வண்ணம் பூசுபவனிடம் செல்" என்றான்.


நரியும்  வண்ணம் பூசுபவரிடம் சென்று “எனக்கு புலியைப் போல் தோற்றம் வேண்டும் எனவே என் மீது  வண்ணம் பூசு" என்றது.  அவனும் சரி என்று சொல்லிக்கொண்டு அந்த நரியின் மேல் வண்ணத்தை பூசினார்.


அந்த நரி பார்ப்பதற்கு புலியைப் போல்  தோற்றம் கொண்டிருந்தது.  நரி தனக்குள்  “இனிமேல் எல்லோரும் நிச்சயமாக என்னை பார்த்து பயப்படுவார்கள்” என்று சிரித்துக்கொண்டே காட்டுக்குள் சென்றது.புலியை போல்  சத்தமிட முயற்சித்தது.ஆனால் முடியவில்லை. 


வித்தியாசமான சத்தத்தை கேட்டு மற்ற எல்லா விலங்குகளும் ஓடி வந்தன. மற்ற விலங்குகள் நரியை பார்த்து ஆச்சரியப்பட்டனர்.  ஆனால் சிறிது நேரத்தில் பயங்கரமான மழை ஆரம்பித்தது. அந்த மழையில் நனைந்த  நரியின் வேஷம் அனைத்தும் கலைந்து போயிற்று. அந்த நரி மீண்டும் பழைய நிலைமைக்கே வந்தது. இதை பார்த்த மற்ற எல்லா விலங்குகளும் ஏளனமாக  சிரித்தனர்.


 நீதி:  பிறரை போல் இல்லாமல், நாம் நாமாக இருப்பதே நல்லது.

இன்றைய செய்திகள்

02.01.2025

* 2024-ம் ஆண்டில் அரசு பணிக்கு 10,701 பேர் தேர்வு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தகவல்.

* வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது.

* சைபர் குற்றங்களுக்கு அதிகம் பயன்படுத்தும் தளமாக வாட்ஸ் அப் உள்ளது என்றும், அதற்கு அடுத்த இடத்தில் டெலிகிராம் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்கள் இருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

* சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காரணம் அவர் 16 சூரிய உதயங்களையும் சூரிய அஸ்தமனங்களையும் காண முடியும்.

* உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் தமிழக வீராங்கனை ரமேஷ்பாபு வைஷாலி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

* சர்வதேச நட்பு ரீதியிலான மகளிர் கால்பந்தாட்டத்தில்  மாலத்தீவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

Today's Headlines

* 10,701 people selected for government jobs in 2024: Tamil Nadu Public Service Commission information.

* The Employment and Training Department has announced that applications can be made online from today to start new ITIs, renew recognition, and start new industries in the coming academic year.

* The Home Ministry has announced that WhatsApp is the most used platform for cyber crimes, followed by Telegram and Instagram.

* It has been reported that Sunita Williams, who is in the International Space Station, will celebrate the New Year 16 times because she can see 16 sunrises and sunsets.

* Tamil Nadu player Rameshbabu Vaishali has won the World Blitz Chess Championship bronze medal.

* India achieved a huge victory by defeating Maldives in an international friendly women's football match.

Covai women ICT_போதிமரம்